இன்னும் எத்தனை தீபாவளி பண்டிகை வந்தாலும் அன்று குதூகலத்துடன் கொண்டாடிய தீபாவளி நிகழ்வுதான் இன்றுவரை மனதில் நிலைத்திருக்கிறது. நான்கு வருடப் பல்கலைக்கழக வாழ்வில் பல இன்னல்கள், சவால்கள், துயரங்கள் கடந்து வந்திருந்தாலும் அந்த இறுதியாண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி திருநாளை இன்று நினைத்துப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.
இரண்டு வருடக் கொரோனா தொற்றில் நாடே கதிகலங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் திரும்புவதற்குச் செப்டம்பரில் பல்கலைக்கழக வாசல் திறக்கப்பட்டது.
தீபாவளியைக் கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் இப்படியொரு சோதனையா என்று மனதில் சிறு கலகம் ஏற்பட்டது. ஆனால், கல்விதானே முக்கியம்.
பெற்றோர்களுடன் சேர்ந்து பலகாரம் செய்வது, வீட்டை அலங்கரிப்பது, வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வித்தியாசமான வர்ணத்தைப் பூசுவது எனப் பெரும் கற்பனையில் இருந்த எனக்கு அந்தச் செய்தி பேரிடியாகவே இருந்தது. இருப்பினும், பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட்டேன்.
கடல் கடந்து பயில சென்றிருக்கும் பிள்ளைகள் தீபாவளிக்கு வீட்டிற்கு வருவார்கள் என்பதற்காக வீட்டில் தடப்புடலாகப் பலகாரங்கள், எந்த எந்த உறவினர் வீட்டிற்குச் செல்லலாம், எத்தனை புத்தாடைகள் வாங்குவது போன்ற ஆழ்ந்த எண்ணங்கள் அம்மாவின் மனதில் வேரூன்றி இருக்கலாம். சுருங்கச் சொல்ல போனால் இந்தத் தீபாவளிக்கு வீட்டிற்கு வருவேன் என்று அம்மாவும் அப்பாவும் நினைத்திருந்தனர்.
ஆனால், எங்களின் துரதிர்ஷ்டம் நவம்பர் மாத விமானப் பயணச் சீட்டுகள் விலை (டிக்கெட்டு) கிடு கிடு ஏற்றம், எங்களை தூக்கி வாரிப்போட்டது. பணத்தை எப்படியாவது திரட்டி விடலாம் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் டிக்கெட் கிடைக்க வேண்டுமே. டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக வெளியான செய்தி அந்த வருட தீபாவளியை நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு நானும் என்னுடன் கல்வி பயின்ற சக தோழிகளும் ஆளானோம்.
ஆம், கடந்த வருடம் தீபாவளியைத்தான் சொல்கிறேன். நாங்கள் உயர்க்கல்வி பயின்ற மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தில்தான் எங்களுக்கு நூதன அனுபவம் கிடைத்தது. தீபாவளி நெருங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கும் நிலையில் தீபாவளியை மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிலேயே கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
கடல் கடந்து உயர்க்கல்வி மேற்கொள்ள சரவாக் பல்கலைக்கழகத்திற்கு வரும் இந்திய மாணவர்கள் தீபாவளியன்று வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டாலும் அவர்கள் தங்களின் பண்பாடுகளைத் தவறாமல் தங்கும் விடுதிலேயே அத்திருநாளைக் கொண்டாடுவர்கள் என்று அங்குப் பணியாற்றும் பேராசிரியர்கள் விளக்கம் தந்தனர்.
பொதுவாகவே சபா, சரவாக் மாநிலங்களில் தீபாவளி பண்டிகைக்குப் பொது விடுமுறை வழங்கப்படாது. குறைந்த எண்ணிக்கையிலேயே இந்துக்கள் சபா, சரவாக்கில் காணப்படுவதால் தீபாவளியைத் தீபகற்ப மலேசியாவைப் போன்று வெகு விமரிசையாகக் கொண்டாடமாட்டர்கள்.
அலுவல் காரணமாகப் பணியிடம் மாற்றலாகி சரவாவிற்குச் சென்ற இந்தியர்கள் அங்கேயே தங்களின் சமூகத்தின் அடையாளச் சுவடுகளைப் பதியச் செய்துள்ளனர்.
தீபாவளிக்கு இரண்டு நாள்கள் மட்டுமே எஞ்சியிருந்தபோது நானும் என் உயிர் தோழிகளான திவ்யா, புவனேஸ்வரி, யுவராணி, டான்யா மற்றும் ரனிஷா ஆகியோர் நாங்கள் பயின்ற மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் அருகில் இருக்கும் சம்மர் மால் பேரங்காடிக்குத் தீபாவளி பொருள்களை வாங்க தயாரானோம்.
நாங்கள் தங்கியிருந்தது பல்கலைக்கழகத் தங்கும் விடுதி என்ற போதிலும் வீட்டில் இருப்பதைப் போன்ற ஒரு குதூகலத்தை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பும் கடமையும் காத்திருந்தது.
ரனிஷா வீட்டைக் கழுவினார். புவனேஸ் ஆங்காங்கே இருக்கும் ஒட்டடையைச் சுத்தம் செய்தார். வண்ண வண்ண விளக்குகளை அலங்கரிக்கும் பணியில் டிவ்யா ஈடுப்பட்டார். நானும் டான்யாவும் வாசற்படியில் ஓர் அழகிய பூக்கோலத்தை வடிவமைத்தோம்.
பணியின்போது யாருக்கும் சோர்வு தட்டிவிடாமல் இருக்க காதுக்கினிய பாடல்களையும் இடம்பெற செய்தோம். இடை இடையே சிறிது குத்தாட்டம் இருந்தது வேறு விஷயம். நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மற்ற தொகுதிகளில் உள்ள மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. அதற்காக நாங்கள் செய்த அந்த வேலைகள் ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தோம். நேரம் போனது தெரியவில்லை என்றாலும் மறுநாள் தீபாவளி.
சரியாக நள்ளிரவு 12 மணி ஆகிய பின் முதலில் எங்களில் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டோம்.
அன்று தீபாவளி. வழக்கத்திற்கும் மாறாகா நாங்கள் சீக்கிரமாகவே எழுந்துவிட்டோம். வாங்கி வந்த சீயக்காய் வைத்து நல்லெண்ணெய் கொண்டு குளித்து விட்டு ஏற்கனவே பயன்படுத்தாமல் இருந்த புத்தாடைகளை அணிந்து கொண்டோம். எங்களுக்கும் தீபாவளி வந்துவிட்டது என்பதை உலகிற்குக் காட்ட ஒரு ‘செல்ஃபியும்’ எடுத்துக் கொண்டோம்.
கடல் கடந்து வந்து கல்விப் பயணத்தின்போது தீபாவளியைச் சக தோழிகளுடன் குதூகலமாகக் கொண்டாடும் நிலை ஏற்பட்டாலும் பெற்றோர்களைக் காணாதது, அவர்களிடம் நேரடியாக ஆசிர்வாதம் வாங்காதது, அந்த ‘அங்பாவ்’ தொகையைச் சிணுங்களுடன் வாங்காதது பெரும் குறையாகவே மனதில் ஒரு புறம் தேங்கி நின்றது.
பெற்றோர்களுக்கும் தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்து சற்று அவர்களுடன் கதை பேசி கொண்டிருந்தோம். அதன்பின், எங்களைப் போன்று தீபாவளியன்று தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பாத இந்திய மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகத்தின் அருகில் இருக்கும் ஶ்ரீ ஶ்ரீனிவாசகர் காளியம்மன் ஆலயத்திற்குச் சென்று இறையருள் பெற்று மீண்டும் பல்கலைக்கழகம் திரும்பினோம்.
பசி கபகப வென எடுக்க தொடங்கியது. இட்லி, தோசை, கோழிக்கறி, ஆட்டுக்கறி அனைத்தும் கண்முன் வந்து வந்து சென்றன. தீபாவளி என்றாலே இதுதான் ‘ஸ்பேஷல்’. இந்நேரம் வீட்டில் இருந்திருந்தால் ஒரு பிடி பிடித்திருக்கலாம் என்று எங்களின் ஒருவர் குரல் உயர்த்தினார். உண்மைதான் வீட்டில் இருந்தால் தீபாவளி உணவுக்குப் பஞ்சமா என்ன?
நாங்கள் இப்படி பேசிக் கொண்டிருப்பது எங்கள் பெற்றோருக்குக் கேட்டதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், எங்களுக்கு எப்போதும் பல்கலைக்கழகத்தில் எல்லா காரியங்களிலும் உறுதுணையாக இருந்த எங்கள் நலன் மீது மிகுந்த அக்கறை செலுத்திய எங்களை ஈன்றெடுக்காத அம்மா எனச் சொல்லும் பேராசிரியர் டாக்டர் விமலா கோவிந்தராஜுக்கு எங்களின் அபயக்குரல் கேட்டுவிட்டது.
அந்தப் பேராசிரியரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. வீட்டில் இட்லி, தோசை, கோழிக்கறி, சட்னி தயாராக உள்ளன. காலை உணவு இங்குதான் என்று சொல்லி அன்புடன் அழைத்தார்.
எங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அவர் வீட்டை நோக்கி விரைந்து சென்று வணங்கி வாழ்த்தினைக் கூறிவிட்டு அவர் உபசரணையில் நடந்த மற்ற சமாச்சாரங்களை ஒரு கை பார்த்தோம்.
அடுத்து எங்குச் செல்லலாம் என்று யோசித்த மாத்திரத்தில் எங்களில் ஒருவர் நடிகர் கார்த்திக் நடித்து பிரபலமாக இன்று திரையரங்கில் ஒளியேறிய ‘சர்டார்’ படத்தைப் பார்க்க செல்வோம் என்று கூற மற்றவர்களும் அதற்கு இணங்க பின் தொடர்ந்து, சிட்டி ஓன் மெகாமால்க்குச் சென்றோம். திரையரங்கில் படம் தொடங்க சற்று தாமதமாகிய நிலையில் அறிமுகம் இல்லாத ஒருவரின் நட்பு ஏற்பட்டது.
பிறகு அனைவரும் ஆரவாரத்துடன் படத்தைக் கண்டு களித்தோம். அதன் பின் சரவாக்கில் பிரசித்திப் பெற்ற இடமான கூச்சிங், வாட்டர்ஃப்ரோன்க்குச் சென்றோம்.
இரவு நேரத்தில் அந்த இடத்தில் சுற்றி ஒளிக்கும் வண்ண வண்ண விளக்குகள், ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் கடை வரிசைகள், வித விதமான உணவுத் திண்பண்டங்கள், அந்தப் பாலத்தின் மேல் ஏறி பார்த்தால் சரவாக் மாநிலமே தெரியும். அந்த அளவிற்கு உயர்ந்து நிற்கும். அவ்விடத்தில் எப்போதும் ஆள்கள் சற்று அதிகமாகதான் இருக்கும்.
காரணம் அவ்விடத்தில் அடிக்கடி நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகவே தனி ஒரு கூட்டம் எப்போதும் அங்குச் சூழ்ந்திருக்கும். ‘மாஸ்கோட்’ அணிந்து சிங்கம், டோரேமோன், மிக்கி மவ்ஸ் போன்ற வேடத்தில் இருப்பவர்களுடன் ஒரு ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டு இரவு உணவும் அங்கேயே உண்டு களித்து பல்கலைக்கழகம் திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது.
வகுப்பு நேரங்களில் மட்டுமே நண்பர்களுடன் நேரம் செலவிடும் நிலை இருந்தபோது ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் பயணித்த இந்தத் தீபாவாளி என்றென்றும் மறவாத பண்டிகைதான். இன்றுவரை நினைத்து பார்க்கையில் அந்த நினைவுகள் தேங்கி நிற்கிறது.