நாய் ஒன்று மிக கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பினாங்கு போலீசார் மூன்று ஆடவர்களை கைது செய்துள்ளனர். இன்று காலையில் கைது செய்யப்பட்ட அந்த மூன்று நபர்களையும் வரும் ஜுலை 12 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் காவ் கொக் சின் தெரிவித்தார்.
40 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று நபர்களில் ஒருவர் கார்கோ ஏஜெண்டு என்றும்,மற்றொருவர் மீனவர் என்றும், மூன்றாவது நபர் பேருந்து ஓட்டுநர் என்றும் காவ் கொக் சின் விளக்கினார். மூன்று நபர்களுக்கும் முந்தைய குற்றப்பதிவு எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நபர்கள் மிக கொடூரமாக நாயை அடித்துக்கொல்லும் காட்சியை கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த மூன்று நபர்களும் அடையாளம் காணப்பட்டு வளைத்துப் பிடிக்கப்பட்டதாக காவ் கொக் சின் மேலும் கூறினார்.