இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் அடை மழை மற்றும் வெள்ளத்தினால் சிக்கி பரிதவிப்பதாக கூறப்பட்ட பத்து மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது. தொடக்கத்தில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 12 மலேசியர்கள் என்று கூறப்பட்டது. எனினும் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் மொத்த எண்ணிக்கை பத்து பேர் என்று விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது. எஞ்சிய இருவர் மலேசியர்கள் அல்ல என்றும் / அவர்கள், அந்த பத்து மலேசியர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் சீன மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர்களில் ஒருவருடன் தொடர்பு கொண்ட மலேசிய தூதரகம் உறுதிப்படுத்தியது. அந்த பத்து பேரும் சிம்லாவிற்கு அருகில் உள்ள குல்லு பள்ளத்தாக்குப் பகுதியான மனாலியில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் இன்று வியாழக்கிழமை சிம்லாவிலிருந்து டில்லி வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.