போதைப்பொருள் வழக்கில் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த இந்திய மாது ஒருவரை சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. சிறைச்சாலையில் குழந்தையை பிரசவித்து, கடந்த 17 மாத காலமாக அக்குழந்தையை சிறைச்சாலையிலேயே வளர்த்து வந்த 34 வயது ஆர்.தேவகி என்ற அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தோல்விக் கண்டுள்ளதாக சிரம்பான் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தின் ரொஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த தேவகி, கடத்தியதாக கூறப்படும் அந்த போதைப்பொருள், அவருக்கு சொந்தமானது என்பதை நிருபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி டத்தின் ரொஹானி இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.
கடநத் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் போர்டிக்சன், பன்டார் டத்தாரான் செகார் என்ற இடத்தில் 237.86 கனாபிஸ் போதைப்பொருளை கடத்தியதாக தேவகி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தேவகி, இனி நண்பர்களுடன் பழுகும் போது மிகுந்த கவனம் தேவை என்ற எச்சரிக்கையுடன் அவரை எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே நீதிபதி ரொஹானி இஸ்மாயில் விடுதலை செய்தார்.