6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக நோக்கப்படும் கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூர், தற்போது இரண்டு குற்றவியல் வழக்குகளையும், மூன்று அவதூறு வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ளார்.
மேடையில் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனாலும், சிலேடை பேச்சினானாலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் சனூசி நூர், தேர்தல் காலகட்டத்தில் யாரும் எதிர்நோக்காத அளவிற்கு மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்தகைய குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டது குறித்து அரசியல் செராமாவில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படும் சனூசி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் தன்மையிலான இரு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த இரு குற்றவியல் வழக்குகளிலும் சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும் என்ற ஓர் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.