கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவர் என்று கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். கெடா மாநிலத்திற்கு தாம் எதிரானவராக இருந்திருந்தால் அந்த மாநிலத்திற்கு கூடுதல் முதலீட்டை எவ்வாறு கொண்டு வந்திருக்க முடியும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார். கெடா மாநிலத்தில் குலின் ஹை-டெக் பார்க் பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கு மட்டும் 2,500 கோடி வெள்ளிக்கும் கூடுதலாக முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நெற்களஞ்சியத்திற்கு பிரசித்திப்பெற்ற மாநிலமான கெடா, பொருளியல் திட்டத்தின் பங்கு கொள்ளும் மாநில மாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தாம் எவ்வாறு கெடா மாநிலத்திற்கு எதிரானவராக இருக்க முடியும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் வினவினார்.
நேற்று வெள்ளிக்கிழமை கெடா, பாலிங்கில் குபாங் என்ற இடத்தில் கெடா மாநில ஒற்றுமை மடானி திட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.