இம்மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி சமூகத்தினரின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த சிறப்புத்துறை உருவாக்கப்படும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.
அந்த சிறப்புத்துறையில் இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லி சமூகத்தின் சமூகவியல், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 5 கோடி வெள்ளி சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் முகைதீன் குறிப்பிட்டார். நேற்று ஷா ஆலாமில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட போது பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் இதனை குறிப்பிட்டார்.
தவிர, சிலாங்கூர் மாநிலத்தில் சிரமத்தில் உள்ள 65 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதம் தோறும் தலா 400 வெள்ளி பெறுமானமுள்ள அத்தியாவாசியப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், தாய்மார்களுக்கான குழந்தை பிரசவிப்பு அனுகூலமாக தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று முகைதீன் குறிப்பிட்டார். சிலாங்கூர் மாநில மக்களின் மேன்மைக்காக மொத்தம் 200 கோடி வெள்ளி மதிப்புள்ள 7 அனுகூலத் திட்டங்களையும் முகைதீன் அறிவித்தார்.