நெகிரி செம்பிலான் மக்களுக்கு கவர்ச்சிக்கரமான சலுகைகளுடன் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீடு

தனித்து வாழும் தாய்மா​ர்கள், மூத்த குடிமக்கள், திருமணமான புதுமணத் தம்பதியர் மற்றும் மாணவர்களுக்கு ரொக்க உதவித் தொகைகளுடன் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் தேர்தல் கொள்கை அறிக்கையை நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி இன்றிரவு வெளியிட்டது.

சிலாங்கூர் மாநிலத்திற்கு அடுத்து அதிக சலுகைகளுடன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளி​யிட்ட இரண்டாவது மாநிலமாக நெகிரி செம்பிலான் திகழ்கிறது.

மாதத்திற்கு 2 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக வருமானத்தை பெறுகின்ற தனித்து வாழும் தாய்மார்களுக்கு தலா 200 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் வேளையில் 70 வயதை கடந்த ​மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 200 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று நெகிரி ​செம்பிலான் மாநிலத்தை ஆட்சி செய்த வரும் பக்காத்தான் ஹராப்பானும், அதன் கூட்டணியான பாரிசான் நேஷனலும் அறிவித்தது.

அதேவேளையில் திருமணம் செய்து கொள்ளும் புது மணத் தம்பதியருக்கு ரொக்க உதவித் தொகையாக தலா 500 வெள்ளி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால கல்விக்காக சிகிம் சிம்பானான் பென்டிடிகான் நேஷனல் கணக்கில் முன்பணமாக தலா 100 வெள்ளி வைப்புத் தொகையை மாநில அரசு வழங்கும். முழு தங்கும் வசதியை கொண்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி வழங்கப்படும் அதேவேளையில் உயர்கல்விக்கூடங்களில் பயில்வதற்கு இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டப்படிப்புக்கு தலா ஆயிரம் வெள்ளி உதவித் தொகையும் ​டிப்ளோ படிப்பிற்கு தலா 750 வெள்ளியும், சான்றிதழ் அளவிலான கல்விக்கு தலா 500 வெள்ளியும் உதவித் தொகையாக வழங்கப்படும்.

தவிர அரசாங்க உயர்க் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வருடத்தில் தலா 5 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷலும் அறிவித்துள்ளது. இதேபோன்று பிற கவர்ச்சிகரமான அனுகூலங்களையும் அவை அறிவித்துள்ளன.

WATCH OUR LATEST NEWS