போலீஸ்காரரை மிரட்டியது உட்பட மூன்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு மீண்டும் பணிக்கு திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போலீஸ்காரரை மிரட்டியது, கார் நிறுத்தும் இடத்தில் வாகனமோட்டியிடம் தகராற்றில் ஈடுபட்டது, போலீஸ்காரரை கடுஞ்சொற்களால் அவமதித்தது போன்ற காணொளிகளால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.ஷீலா ஷேரன் ஸ்தீவன் குமார் என்ற 35 வயதுடைய அந்த பெண் இன்ஸ்பெக்டர், செலாயாங் நீதிமன்றத்தில் தாம் எதிநோக்கியுள்ள குற்றவியல் வழக்கை எதிர்கொள்ள வந்திருந்த போது, செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
போலீஸ் துறை தாம் விரும்பி தேர்வு செய்த துறையாகும் என்று ஷீலா குறிப்பிட்டார். தமக்கு உள்ள தகுதிக்கும், அனுபவத்திற்கும் வேறு துறைக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று பணியாற்ற முடியும். ஆனால், போலீஸ் துறை தாம் விரும்பிய துறையாகும். அந்த துறையை விட்டு தம்மால் வெறுமனே ஒதுங்கி நிற்க முடியாது என்று ஷீலா குறிப்பிட்டார்.
இறைவன் அருளில் அனைத்தும் நன்றாக நடக்குமானால் மீண்டும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு திரும்பி , தாம் வகித்து வந்த பொறுப்பை, ஏற்கவிருப்பதாக போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஷீலா உறுதி தெரிவித்துள்ளார்.