9 துப்பாக்கிச் சூடுகள், ஆடவர் தேடப்படுகிறார்

கோலாலம்பூர் ஜாலான் கெப்போங்கில் போலீஸ் சோதனையின் போது காரை நிறுத்த மறுத்துவிட்ட இரு நபர்கள் சென்ற காரை நோக்கி போலீசார் 9 துப்பாக்கிச் சூடு பிரயோகத்தை நடத்தினர்.
எனினும் போலீசாரின் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து மிக லாவகமாக தப்பிய இரு நபர்களை தேடும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை 7:45 மணியளவில் ஜாலான் கெப்போங், லாமான் ரிம்புனான் சாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் ஓர் உள்ளூர் வாசியான முக்கிய சந்தேகப் பேர்வழி 40 வயது கணேசன் உலகநாதனை போலீசார் தேடிவருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர்டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் பயன்படுத்திய புரோத்தோன் விரா காரின் டயர்களை நோக்கி மூன்று போலீஸ்காரர்கள் துப்பாக்கி பிரயோகம் நடத்தும் காட்சியைக் கொண்ட காணொலி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டு இருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலையமகத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமது ஷுஹைலி இதனை தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் டயர்கள் வெடித்ததால் கார் தடம் புரண்ட வேளையில் அந்த இரு நபர்களும் ஒரு வீடமைப்புப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக முகமது ஷுஹைலி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS