வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மாநில தேர்தலில் கெடா, லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிசந்திரன் மூத்தக் குடிமக்களின் வசதிக்காக வாக்களிப்பு தினத்தன்று சக்கர நாற்காலி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் வாக்களிப்புத் தினத்தன்று மூத்த குடிமக்கள் குறிப்பாக நடக்க இயலாதவர்கள், நடக்க சிரமப்படுகின்றவர்களுக்கு சக்கர நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படாததால் அவர்கள் வாக்கு மையங்களுக்கு செல்வதிலும் வாக்களிப்பதிலும் சிரமங்களை எதிர் நோக்கியதை கண்கூடாக பார்க்க முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் அரிசந்திரன் தெரிவித்தார்.
நேற்று பாயா பெசார் வட்டாரத்தில் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த அரிசந்திரனிடம் மூத்த குடிமக்கள் வாக்களிப்பு தினத்தன்று தாங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து லூனாஸ் தொகுதியில் இத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அரிசந்திரன் உறுதியளித்தார்.