கோலாலம்பூர், ஜாலான் குச்சை லமா,ஶ்ரீ டேசா என்ட்ரெப்ரொனர் பார்க் கில் கட்டடம் ஒன்றின் காண்கிரேட் இடிந்து விழுந்ததில் 10 வாகனங்கள் சேதமுற்றன. இச்சம்பவம் நேற்று இரவு 9.50 மணியளவில் நிகழ்ந்தது. இரவு 9.59 மணியளவில் இது தொடர்பாக அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக கோலாலம்பூர் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் வாகனங்கள் கடுமையாக சேதமுற்றன.
இடிபாடுகளுக்கு இடையில் யாரும் சிக்கியுள்ளார்களா? என்பதை கண்டறிவதற்கு பன்டார் துன் ரசாக், ஜாலான் ஹங் துவா மற்றும் செப்புத்தே ஆகிய நிலையங்களிலிருந்து தீயணைப்பு, மீட்புப்படை இயந்திரங்களுடன் 26 வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
6 மாடிகளை கொண்ட அந்த கட்டடத் தொகுதியின் நான்காவது மாடியில் மேற்கூரை காண்கிரேட் இடிந்து விழுந்ததில் கற்கள் நாலாபுறமும் சிதறியதில் வாகனகள சேதமுற்றதாக அவர் மேலும் கூறினார். அப்பகுதியில் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டு, கட்டடத்தின் பாதுகாப்புத் தன்மையை மாநகர் மன்றம் மற்றும் பொதுப்பணி இலாகா ஆராய்ந்து வருவதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.