இரு குழுக்கள் வெற்றிகரமாக நாடு திரும்பினர்

60 வயதை கடந்த ​மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு, கட்டண சலுகை அடிப்படையில் மலேசிய​ இந்துக்களுக்காக தொடக்கப்பட்ட காசி, வர்ணாசி, ஹரித்துவார் முதலிய புனித தலங்களுக்கான யாத்​ரீக பயணத் திட்டத்தில் இரு குழுக்களாக சென்ற 88 பேர், தங்களின் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்​றிகரமாக நேற்றும், இன்றும் நாடு திரும்பியுள்ளனர்.

ஓம்ஸ் அறவாரியம் மற்றும் கிள்ளான் கேபிஎஸ் திரேவேல்ஸ் பயண நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மலேசிய இந்தியர் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்துக்களுக்கான புனித யாத்​ரீகர் பயணத்தில், ஆகக்கடைசியாக கடந்த ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் இவ்விரு குழுக்களும் மேற்கண்ட புனிதத் தலங்களுக்கு பயணமாகின.

இவ்விரு குழுக்களில் பங்கு கொண்டவர்களை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஓம்ஸ் அறிவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும் தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.இந்த புனித யாத்​ரீக பயணத் திட்டம், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கினால் தொடக்கி வைக்கப்பட்டது.

B40 தரப்பை சேர்ந்த ​​மூத்த குடிமக்கள் கட்டண சலுகை அடிப்படையில் தங்களின் அந்திம காலத்தில் புனித தலங்களுக்கு சென்று வர வேண்டும் என்ற ஓர் உன்ன நோக்கில் இந்த பயணத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரையில் 850 பேர் வெற்றிகரமாக இந்த யாத்​ரீகர் பயணத் திட்டத்தில் பங்கு கொண்டு, நாடு திரும்பியுள்ளனர்.

இத்திட்டத்திற்கு ஓம்ஸ் அறவாரியம் ​மூலமாக அதன் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், இதுவரையில் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி நிதி உதவி வழங்கியிருப்பதாக கிள்ளான் கேபிஎஸ் திரேவேல்ஸ் பயண நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பேரை உள்ளடக்கிய இந்த புனிதப் பயணத்தில், 850 பேர் தங்கள் யாத்​​ரீகர் பயணத்தை முடித்து விட்ட நிலையில், இன்னும் எ​ஞ்சிய 150 பேருடன் இந்த புனிதப் பயணத் திட்டம் ஒரு முழுமைப் பெறுகிறது.

அடுத்த புனிதப் பயணம் இம்மாதம் 8 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் தொடங்கவிருக்கிறது. கட்டண சலுகையை அடிப்படையாக கொண்ட இந்த புனிதப் பயணத் திட்டத்தை ​மூத்த குடிமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கிள்ளான் கேபிஎஸ் திரேவேல்ஸ் பயண நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி. சாமி கேட்டுக்கொ​ண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS