தந்தையை சுலோப்பினால் அடித்துக்கொன்று, சடலத்தை சாலையோரத்தில் வீசியதாக கூறப்படும் மகன்,நாளை திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி சுங்கைவேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பில் ஒரு வேலையற்ற நபரான 40 வயது சந்தேகப்பேர்வழி, காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2 ஆண்டு காலமாக வேலைக்கு செல்லாமல் இருப்பதாக கூறப்படும் தனது மகனை, கண்டித்ததற்காக 70 வயதுடைய அந்த தந்தை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அந்த நபரின் சடலம் பின்னர் துணியால் சுற்றுப்பட்டு சாலையோரத்தில் எறியப்பட்டதாக முகமது ஃபக்ருதீன் மேலும் கூறினார்.