வரும் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றால், தற்போது உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளை 300 ஆக உயர்த்தும் திட்டத்தை அந்த கூட்டணி கொண்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்வதற்கான அதிகாரம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் க்கு மட்டுமே உண்டு. நடப்பு அரசாங்கத்திற்கு இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆளும் கட்சி தரப்பினருடன் எந்தவொரு விவாதமும் நடைபெறாத நிலையில் ஒரு கண்மூடித்தனமான குற்றச்சாட்டை முகைதீன் முன் வைத்துள்ளார் என்று பகான் எம்.பி.யான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.