நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரையில் 3 தினங்களுக்கு இந்தோனேசியா தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெறவிருக்கும் 43 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய பேராளர் குழுவிற்கு தலைமையேற்று, அந்த பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
நாட்டின் பத்தாவது பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு அப்பாற்றப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் ஆசியான் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு கொள்ளவிருக்கின்றன.
இந்த மாநாட்டில் இந்தோ – பசிபிக் ஆசியான் கலந்துரையாடல் சந்திப்பும் நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹரிஸும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் அன்வார், சந்திப்பு நடத்தப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளது.