துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணையை நிறுத்திக்கொள்ளப் போவதாக பிராசிகியூஷன் தரப்பு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படாமல், வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ முஹமாட் டுசுக்கி மொக்தார் நீதிமன்றத்தைக் கொண்டார்.
அகமட் ஜாஹிட், வழக்கிலிருந்து ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கு டிபிபி முஹமாட் டுசுக்கி மொக்தார்,11 காரணங்களை முன்வைத்துள்ளார்.
அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக ஆராயாமல், முறையாக வகைப்படுத்தப்படாமல், அவசர அவரமாக அரங்கேற்றப்பட்டுள்ளன என்பது தாங்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில் தெரியவந்துள்ளதாக டிபிபி முஹமாட் டுசுக்கி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் டிபிபி முஹமாட் டுசுக்கி யின் இந்த விண்ணப்பத்திற்கு அகமட் ஜாஹிட்டின் வழக்கறிஞர் டத்தோ தெஹ் பொஹ் தெய்க் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அகமட் ஜாஹிட், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அகமட் ஜாஹிட்டிற்க எதிரான லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஏன் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்கி 200 பக்கங்களை உள்ளடக்கிய பிரதிநிதித்துவ மனு ஒன்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதையும் வழக்கறிஞர் கெ தெஹ் பொஹ் தெய்க்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
டிபிபி முஹமாட் டுசுக்கி யின் இந்த விண்ணப்பத்தை தொடர்ந்து அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்வதா? இல்லையா ? என்பதை முடிவு செய்வதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் செக்யுரா இவ் வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.