இந்த நாட்டில் செயல்படும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு தலைமையேற்கும் அரசியல் கட்சிகள், வந்தேறிகள் கட்சிகள் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வர்ணித்துள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதவர்கள், தங்களின் இன அடையாளத்தை முன்நிறுத்தி, அரசியல் கட்சிகளை உருவாக்குவது உட்பட மலாய்க்கார கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப் போக முடியாத நிலையில் உள்ளனர். வந்தேறிகளான அவர்களின் இந்தப் போக்கே நாட்டில் இனப் பிரச்னைகளுக்கு வித்திடுகின்றன என்று நாட்டிற்கு இரண்டு முறை பிரதமராக பொறுப்பேற்றவரான துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அண்டை நாடான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறிய வந்தேறிகள், தங்களுக்கு அடைக்கலம் தந்துள்ள மண்ணில் தனிக் கட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களா? என்று துன் மகாதீர் வினவினார்.
அந்த நாடுகளில் இனவாரியாக ஓர் அரசியல் கட்சியைக்கூட பார்க்க முடியாது. ஆனால், மலேசியாவில்தான் வந்தேறிகள் வாழ்கிறார்கள். அவர்களுக்கான அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்று துன் மகாதீர் தெரிவித்தார்.
வந்தேறிகளின் தனி கட்சிகளால்தான், இந்த நாட்டில் இனப்பிரச்னைகள் உருவெடுகின்றன என்று ஜோகூர், பக்ரியில் நேற்று ஆற்றிய உரையில் துன் மகாதீர் இதனை தெரிவித்துள்ளார்.