கோலாலம்பூர், டேசா துன் ரசாக் அடுக்குமாடி பொது குடியிருப்பின் 10 ஆவது மாடியில் எரிவாயு களன் வெடித்ததில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த எரிவாயு களன் வெடித்ததில் அந்த குடியிருப்பின் ஜன்னல் வாயிலாக வெளியேறிய எரிவாயு, கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது விழுந்ததில் அவை தீப்பற்றிக்கொண்டன. இதனால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாக கோலாலம்பூர் மாநகர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10:59 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கை பெசி மற்றும் பண்டார் துன் ரசாக் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 16 வீரர்கள் 4 தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் சுமார் 30 நிமிடத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
இதில் 32 வயதுடைய ஆடவர் 30 விழுக்காடு தீ காயங்களுடன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் கேன்சிலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்பேச்சாளர் அவர் குறிப்பிட்டார்.