சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே விற்கு எதிராக லோரி ஓட்டுனர்கள் குவாந்தான்,இன்டெரா மாகோத்தா அருகில் உள்ள பஹாங் மாநில ஜேபிஜே தலைமை அலுவலகத்தின் முன் மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அந்த அரசாங்க ஏஜென்சிக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நூற்றுக்கு மேற்பட்ட லோரி ஓட்டுனர்கள் சாலை ஓரமாக நின்றுகொண்டு தங்கள் விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.
அனுமதிக்கப்பட்ட எடைக்கு மீறிய சுமைகளை ஏற்றுதல் உட்பட பல்வேறு காரணங்களை முன் வைத்து பஹாங் மாநில ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிராக சம்மன் வழங்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் தங்கள் மீது தொடுத்து வரும் நெருக்குதல் ஆகியவற்றை இனியும் தாங்கிக்கொள்வதற்கு சக்தி இல்லை என்று அந்த லோரி ஓட்டுனர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்லர் ஆனால் ஜேபிஜே வின் கண்மூடித்தனமான அடாவடித்தன நடவடிக்கை தங்களின் வாழ்வாதாரத்தை பெரியளவில் பாதிக்கச் செய்திவிட்டதாக அவர்கள் தங்களின் மனச்சுமையை கொட்டித் தீர்த்தனர்.