ஆலய சிலைகளை உடைத்த நபர் கைது

தைப்பிங், ஜாலான் மாத்தாங் கில் உள்ள ஸ்ரீ மங்களநாயகி ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவர், தெய்வச் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வேளையில் இந்த சிலை உடைப்புக்கு காரணமாக அந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணியளவில் ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, ஆலயத்தின் பின்புறமுள்ள ஒரு தாமானைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் 23 வயதுடைய இளைஞர்ர், சுத்தியலை கொண்டு தெய்வச் சிலைகளை உடைத்து, தகர்த்தெறிந்ததாக கூறப்படுகிறது.

இதனை நேரில் பார்த்த கோயிலில் இருந்த பக்தர்கள், அந்த இளைஞரின் செயலை தடுத்து நிறுத்தியதுடன் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சிலைகளை உடைத்தப் பின்னர் ஆலய வளாத்திலிருந்து வெளியேறி, தனது வீட்டிற்கு சென்ற விட்ட அந்த இளைஞர், காலை 9 மணியளவில் அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

சிலைகளை உடைப்பதற்கு அந்த ஆடவர் பயன்படுத்திய இரண்டு சுத்தியல்களை போலீசார் மீட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அந்த ஆடவர்,தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவதற்கு ஏதுவாக போலீசார் நாளை வியாழக்கிழமை அந்த நபரை நீதிமன்றத்தில் நிறுத்தவிருப்பதாக ஏசிபி ரஸ்லாம் குறிப்பிட்டார்.

கோயிலின் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பம் குற்றவியல் சட்டம் 427 மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS