சிலாங்கூர் மாநிலத்தில் தீபாவளி பற்றச்சீட்டு ஒரே நாளில் கபளிகரமா?ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு விளக்கம் அளிப்பாரா?

சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் B 40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கத் தீபாவளி கொண்டாட்டத்திற்கான மாநில அரசின் 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச்சீட்டு, பல தொகுதிகளில் ஒரே நாளில் கபளிகரம் புரியப்பட்டுள்ளதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையை முன்வைத்து, 200 வெள்ளிக்கான தீபாவளி பற்றுச்சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, நேற்று முன்தினம் அக்டோபர் 16 ஆம் தேதி அறிவித்தார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 300 முதல் 600 பற்றுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக சிலாங்கூரில் உள்ள 22 ஆயிரம் இந்திய குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக சிலாங்கூர் மாநில அரசு 44 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

ஆனால், சில தொகுதிகளில் மட்டுமே 200 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுக்கான விண்ணப்பம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் பற்றுச்சீட்டுகளுக்கான விண்ணப்பம் மூடப்பட்டு விட்டதாக தொகுதி சேவை மையத்தில் அறிக்கை ஒட்டுப்பட்டுள்ளது.

அப்படியென்றால், பாப்பாராயுடு அறிவிப்பு செய்த 200 வெள்ளி தீபாவளி பற்றுச்சீட்டுக்கள் அனைத்தும் ஒரே நாளில் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டனவா? அல்லது தங்களுக்கு வேண்டியவர்களுக்காக ஒரே நாளில் கபளிகரம் புரியப்பட்டுள்ளதா? என்பது குறித்து பலர் திசைகள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவி வருகின்றனர்.

காரணம், பெரும்பாலான தொகுதி அலுலகங்களின் முன்வாசல் கண்ணாடியில் Permohanan Baucar Perayaan Deepavali 2023 Telah Di Tutup. Terima kasih என்று எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS