67 வயதுடைய வளர்ப்பு தாயாரை காயப்படுத்தியதாக கூறப்படும் 25 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்நபர் நேற்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் கோம்பாக்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தராவி தெரிவித்தார்.
அந்த மூதாட்டியின் பெயரில் உள்ள சொத்துக்களை தம்முடைய பெயருக்கு மாற்றச் சொன்னதாகவும், அதனை அந்த வளர்ப்பு தாயார் மறுத்து விட்டதாகவும் , இதனால் கோபமடைந்த அந்த நபர், வீட்டில் இருந்தப் பொருட்களை அந்த மூதாட்டியின் மீது தூக்கி எறிந்ததில் அவர் காயம் அடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி அரிஃபாய் குறிப்பிட்டார்.
அந்த மூதாட்டியின் இடது கண்ணில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக ஏசிபி அரிஃபாய் மேலும் கூறினார்.