அதிகமான சீன மற்றும் இந்திய நாட்டு சுற்றுப்பயணிக்களை கவரும் பிரச்சாரத்தில் மலேசியா, தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று டிசம்பர் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளும் மலேசியாவில் விசாயின்றி 30 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும் என்ற சலுகையானது, மலேசிய சுற்றுலாத்துறைக்கு மேலும் உந்துதலாக அமையும் என்று மலேசிய சுற்றுலாத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அம்மார் ஏபிடி காப்பார் தெரிவித்தார்.
மலேசிய சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தங்கள் நாட்டுப்பிரஜைகளை மலேசியாவின் சுற்றுலாவில் பங்கேற்க செய்வதில் சீனா, இந்திய சுற்றுலாத் துறையினரும், விமான நிறுவனங்களும், பயண நிறுவனங்களும் இணை பங்களிப்பை வழங்குவார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.