பினாங்கு முதல்வர் சொவ் கொன் யொ விற்கும், முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் கிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர், வெட்ட வெளிச்சத்திற்கு வரும் அளவிற்கு விரிசல் முற்றியுள்ளது.
டிஏபி தலைவரான லிம் குவான் எங்கிற்கும் நடப்பு முதல்வர் சொவ் கொன் யொவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் கடுமையாகி வருவவதை உணர முடிகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பினாங்கு அரசுக்கு சொந்தமான ஒரு நிலம், மேம்பாட்டாளருக்கு விற்கும் திட்டம் தொடர்பில் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தம்மை வீழ்த்துவதற்கு சதிமுயற்சிகள் நடைபெறுகின்றன என்று கடந்த அக்டோபர் மாதம் சொவ் கொன் யொ, பகிரங்கமாக அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அதற்கான ஆதாரத்தை நிரூபிக்குமாறு ஆயிர் புத்திஹ் சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் சவால் விட்டதைத் தொடர்ந்து டிஏபி யின் இரு பெரும் தலைவர்களுக்கு இடையில் விரிசல் பூதாகரமாக வெடித்தது.
ஒரு மாநிலத்தை வழிநடத்தி வருகின்ற தலைவருக்கும், மத்திய அரசாங்கத்தில் கூட்டணி வைத்திருக்கும் டிஏபி யின் தலைவருக்கும் இடையில் நிகழ்ந்து வரும் இந்த பனிப் போர் உச்சத்தை அடையுமானால் இரு பெரும் தலைவர்கள் அங்கம் வகிக்கும் டிஏபி யின் தோற்றத்திற்கு பெரும் களங்கத்தையும், பினாங்கு நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்று கட்சி உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.