மலேசியாவில் வளரிளம்பருவத்தில் கர்ப்பம்-சமூகப் பிரச்சனையாக நோக்கப்பட வேண்டும்

“இளமைக்கால கர்ப்பம் என்பது தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. அதைச் சமூகப் பிரச்சனையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆண், பெண் இருவருக்குமே இளமைக்காலம் என்பது ஆற்றல் மிக்கப் பருவம். இந்தப் பருவத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தைப் பேறு என்பது அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும். ஒரு தனிமனிதன் சீர்குலைவு ஒட்டுமொத்த சமூகத்தின் ஆக்கத்திறனைப் பாழ்படுத்தும்”

மலேசியாவில் ஆண்டுக்குச் சராசரி 4 ஆயிரம் இளம் பெண்கள் குறிப்பாக, 18 வயதுக்கும் குறைவான வளரிளம் பருவத்தைக் கொண்ட பெண்கள் கருத்தரிப்பதைச் சுகாதார அமைச்சு கவலையுடன் தெரிவித்துள்ளது. இந்தச் சராசரி கணக்கெடுப்புப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
வளரிளம் பருவத்திலேயே பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது, பாலியல் வன்கொடுமை போன்ற செயல்கள் போன்றவற்றினால் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

உலகச் சுகாதார நிறுவனமான டபிள்யூ. எச்.ஒ. வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆண்டுக்கு 2.1 கோடி இளம் பெண்கள் வளரியல் பருவக் காலத்திலே கர்ப்பமடைவதாகத் தெரிவித்துள்ளது. வளரியல் பருவம் என்பது 10 முதல் 19 வயது வரையுள்ள பருவக் காலமாகும்.
வளரிளம் பருவத்திலேயே சுதந்திரமாகப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவது, கருத்தரித்தல் சம்பவங்களை அதிகமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு கூறுகிறது. பாலியல் நடவடிக்கைகள், கர்ப்பம் தரித்தல் போன்றவை குறித்து போதுமான பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டு இருக்கின்ற காரணத்தினால் மலேசியாவில் இளம் பெண்கள் சம்பந்தப்பட்ட ஆண்டுக்குச் சராசரி 4 ஆயிரம் கர்ப்பம் தரித்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக அது கூறுகிறது.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வியல் மையத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ விரிவுரையாளர் டாக்டர் எங்கு ஹுஸ்னா எங்கு இஸ்மாயில் கூறுகையில் வளரிளம் பருவத்திலேயே பெண்கள் திருமணம் செய்து கொள்வது, இளம் பெண்கள் மத்தியில் கர்ப்பம் தரித்தல் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.

இதைத் தவிர சுதந்திரமான பாலியல் நடவடிக்கைகளும் இளம் பெண்கள் தங்களின் இளம் வயதில் கர்ப்பம் தரித்தலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

சுதந்திரமாகப் பாலியல் நடவடிக்கை என்று சொல்லும்போது சுதந்திரமாகச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துதல், ஆபாசப்படங்களை விரும்பிப் பார்த்தல், பாலியல் கொடுமைகள், இளம் வயதிலேயே தங்கள் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுப்பதால் எழக்கூடிய பாதிப்புகள், தாக்கங்கள் முதலியவற்றை குடும்பத்தினர் அறிந்து வைத்திருக்காதது முதலிய காரணங்களினாலும் பெண்கள் இளம் வயதிலேயே கர்ப்பம் தரித்து விடுகின்றனர் என்று டாக்டர் எங்கு ஹுஸ்னா கூறுகிறார்.

மேலும், குடும்ப வறுமை, குடும்பத்தில் பிளவுகள், குடும்ப வன்கொடுமை, மனோரீதியான கொடுமைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தகாத உறவுகளில் ஈடுபடுதல் போன்றவையும் இளம் பெண்கள் கர்ப்பம் தரித்தலுக்குக் காரணமாகி விடுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

வளரிளம் பருவத்திலேயே பெண்கள் கருத்தரிப்பது மிக ஆபத்தான செயலாகும் என்பதையும் அவர் எச்சரிக்கிறார். இளம் பெண்களின் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அந்தத் தருணத்தில் அவர்கள் கருத்தரிப்பது, குறைப்பிரசவத்திற்கு வித்திடலாம்.

உடலளவிலும், மனதளவிலும் பக்குவம் அடைந்திருக்காத நிலையில் அவர்கள் குழந்தையைச் சுமப்பது என்பது அவர்களுக்கு மனதளவில் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கலாம். தவிர குறைப்பிரசவத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் கர்ப்பக்கால நோய்களான இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், எளிதில் தொற்றக்கூடிய தொற்று நோய்கள் போன்றவற்றினால் அவர்கள் அவதியுறலாம் என்று டாக்டர் எங்கு ஹுஸ்னா எச்சரிக்கிறார்.

மலேசியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின்படி, மலேசியாவில் வளரிளம் இளையோர்கள் மத்தியில் பாலியல் மற்றும் சுகாதாரம் குறித்த பொது அறிவு மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளதாக டாக்டர் எங்கு ஹுஸ்னா கூறுகிறார்.

திட்டமிடாத கர்ப்பத்தைத் தவிர்த்தல் அல்லது சுதந்திரமான பாலியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருப்பது போன்றவற்றின் மூலமே பெண்கள் தங்கள் இளம் வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்களைக் குறைக்க முடியும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
திருமணத்திற்கு முன்னதாகவே பாலியல் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கி, தங்களின் தனிப்பட்ட கண்ணியத்தையும், சுய மரியாதையையும் தற்காத்துக் கொள்ளும் மாண்பை அவர்கள் கடைபிடிப்பார்களேயானால் சமூகச் சீர்கேட்டிற்கு வித்திடக்கூடிய இளம் வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று டாக்டர் எங்கு ஹுஸ்னா பரிந்துரைக்கிறார்.

அதேவேளையில் வளரிளம் பருவத்தில் உள்ள பெண் பிள்ளைகளை அணுக்கமாகக் கண்காணிப்பது, அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிதல், உரிய ஆலோசனைகளை வழங்குவது முதலிவற்றில் பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இளம் பெண்கள் மற்றவர்களுடன் பழகும்போது அவர்களின் போக்கில் ஏற்படக்கூடிய மாற்றத்தைக் கொண்டே அவர்களின் நடவடிக்கை குறித்து பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இளம் பெண்கள் திட்டமிடாத கர்ப்பத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு மருத்துவச் சிகிச்சையை நாடுவதற்கு முன்னதாகத் தங்கள் பிள்ளைகள் அப்படியொரு சூழலில் சிக்கிவிடாமல் இருக்க அவர்களை முன்கூட்டியே தடுத்து, உரிய நல்லுரைகளை வழங்குவது தாயாரின் பங்களிப்பும், அரவணைப்பும் மிக முக்கியம் என்று டாக்டர் எங்கு ஹுஸ்னா அறிவுறுத்துகிறார்.

“இளமைக்கால கர்ப்பம் என்பது தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. அதைச் சமூகப் பிரச்சனையாகவே நோக்கப்பட வேண்டும் “ என்று அவர் வலியுறுத்துகிறார்.

WATCH OUR LATEST NEWS