2018ஆம் ஆண்டு, மே 9ஆம் திகதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் துன் மகாதீர் முகமது தலைமையில் இளைஞர், விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான். அப்போது அவருக்கு வயது 25.
ஜொகூர், மூவார் தொகுதியில் பலம் பொருந்திய வேட்பாளரான இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரஸாலி இப்ராஹிமைப் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் சையிட் சாடிக் தோற்கடித்து வெற்றி பெற்று; 2018ஆம் ஆண்டு, ஜுலை 2ஆம் திகதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மலேசிய அரசியல் வரலாற்றில் இளம் வயதில் அமைச்சர் பொறுப்பை ஏற்ற முதலாவது நபராக சையிட் சாடிக் பார்க்கப்பட்டார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் 1978ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் துன் ஹுசேன் ஓன் அமைச்சரவையில் இடம்பெற்ற முதலாவது இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அப்போது அவருக்கு வயது 25. ஆனால், நஜீப் எரிபொருள், தொலைத்தொடர்பு, அஞ்சல்துறையின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தாரே தவிர அந்த வயதில் முழு அமைச்சராகப் பொறுப்பேற்கவில்லை. அவரின் சாதனையை முறியடித்தார் சையிட் சாடிக்.
நஜீப் தமது 33ஆவது வயதில்தான் இளைஞர், விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின்கூட தமது 37ஆவது வயதில்தான் இளைஞர், விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார். இளம் வயதுடைய ஓர் இளைஞருக்குத் துன் மகாதீர் முழு அமைச்சர் பதவியைத் தருகிறார் என்றால் அது சையிட் சாடிக்கின் தனித்துவம் நிறைந்த ஆற்றலுக்காகதான். தமது அரசியல் வாழ்வின் முதற்படியிலேயே அவருக்கு அமைச்சர் பதவி காத்திருந்தது.
துன் மகாதீர் தலைமையில் 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்தவர்களில் சையிட் சாடிக்கின் பங்களிப்பும் அளப்பரியதாகும். துன் மகாதீரின் உதவியாளராக வேலை செய்து கொண்டே பெர்சத்து கட்சி அமைப்பதற்கான வேலைகளிலும் சையிட் சாடிக் பங்கு கொண்டுள்ளார்.
அதற்கு முன்பு, பிரதமர் துறை அமைச்சர் நன்ஸி சுக்ரியின் சிறப்பு அதிகாரியாக சையிட் சாடிக் வேலை செய்து வந்ததால் அரசியல் பிடிமானத்தை அவரால் ஓரளவு அறிய முடிந்தது. ஜொகூர், பூலாயில் நான்கு உடன்பிறப்புகளில் கடைசிப் பிள்ளையான சையிட் சாடிக், இளைஞர் விளையாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்ற எட்டாவது நாளிலேயே நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார்.
புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்று முடிந்த எஃப்.ஏ. கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது ஒரு கருப்புப் பையை எடுத்துக்கொண்டு, அங்குக் குவிந்து கிடந்த குப்பைகளை சையிட் சாடிக் சுத்தம் செய்து கொண்டிருந்தார். சையிட் சாடிக்கின் இந்தச் செயலைப் பொதுத் தேர்தலில் தோல்வி கண்டிருந்த தேசிய முன்னணியைச் சேர்ந்த பேரா முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதீர் மனதாரப் பாராட்டினார்.
எதிர்முகாமில் சையிட் சாடிக் இருந்தாலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரண எதிர்காலத் தலைவராக அவரைப் பார்க்க முடிகிறது என்று ஜம்ரி அப்துல் காதீர் புகழாரம் சூட்டியிருந்தார். சையிட் சாடிக்கின் தோற்றம், உடுத்தும் விதம், மொழித் திறன், எளிமை முதலிய அம்சங்கள் நாட்டு மக்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான சையிட் சாடிக் இராணுவக் கல்லூரி படிப்பிற்குப் பிறகு மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றிருந்தார்.
பள்ளிப் பாடங்களில் ஆங்கில மொழியில் ” A ” மதிப்பெண்ணைப் பெற்றிராத சையிட் சாடிக், உலகளாவிய பல்கலைக்கழக ஆங்கில மொழி பேச்சுப் போட்டியில் மூன்று முறை முதன்மை விருதை வென்று உலகச் சாதனையைப் புரிந்திருக்கிறார்.
இதேபோன்று ஆசிய அளவிலான ஆங்கிலப் பேச்சுப் போட்டியிலும் தொடர்ச்சியாக மூன்று முறை சிறந்த பேச்சாளருக்கான விருதை சையிட் சாடிக் பெற்றிருக்கிறார்.
பிரிட்டனில் பல்கலைக்கழக அளவிலான பேச்சுப் போட்டியிலும் தலைமை நீதிபதியாக சையிட் சாடிக் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அப்போட்டியில் ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் தலைமை நீதிபதியாகவும் அவர் திகழ்ந்தார்.
சிறு வயது முதல் தனித்துவமான சில ஆளுமைகளைக் கொண்டிருந்த சையிட் சாடிக், மூவார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சில மாதங்களிலேயே அவரின் நீண்ட நாள் கனவான இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொது கொள்கை வரைவுத் துறையில் இளங்கலைப் பட்டப் படிப்பு பயில்வதற்கு முழு உபகாரச் சம்பளத்துடன் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், திடீரென்று கிடைத்த அந்த வாய்ப்பினால் தம்மைத் தேர்வு செய்த மூவார் தொகுதி மக்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காக நல்லதோர் அரிய வாய்ப்பை சையிட் சாடிக் நிராகரித்து விட்டார். 2021இல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் லீ குவான் இயூவ் பொது கொள்கைப் பிரிவில் பயில்வதற்கு உபகாரச் சம்பளத்துடன் வழங்கப்பட்ட வாய்ப்பை சையிட் சாடிக் ஏற்றுக்கொண்டார்.
சையிட் சாடிக் ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கான ஆளுமை நிறைந்தவர், நேர்மையானவர் என்பதை நாட்டு மக்களுக்கு உயர்த்திய ஒரு சம்பவம், 2020இல் நிகழ்ந்த ஷெரட்டன் நகர்வாகும்.
துன் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் பெர்சத்து கட்சியின் முன்னணி தலைவர்கள் ஷெரட்டன் நகர்வை முன்னெடுத்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரான சையிட் சாடிக்.
பொதுத் தேர்தலில் மக்கள் தந்த கருத்திணக்கத்தைப் புறக்கணித்து விட்டு, செஷரட்டன் நகர்வின் மூலம் அம்னோவுடன் கூட்டுச் சேர்ந்து முகைதீன் யாசின் தலைமையில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட துரோகச் செயலுக்குத் துணை நிற்கப்போவதில்லை என்று சையிட் சாடிக் உறுதியாகக் கூறினார்.
ஊழல் பேர்வழிகளையும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்களையும் துடைத்தொழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாகவே பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ஊழல் பேர்வழிகளுடன் பெர்சத்து கட்சி கைகோர்ப்பதா என்று சையிட் சாடிக் கடுமையாக எதிர்த்தார்.
அதற்காகப் பெர்சத்து கட்சியிலிருந்து தாம் நீக்கப்படுவது உட்பட எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று துணிந்து சவால் விடுத்தார் சையிட் சாடிக். அடுத்த இரண்டு மாதக் காலத்திலேயே அதாவது 2020ஆம் ஆண்டு, மே மாதம் துன் மகாதீர், சையிட் சாடிக், மஸ்லீக் மாலேக் உட்பட ஐவரை முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சி நீக்கியது.
தமது அரசியல் வாழ்வில் முதற்கட்ட போராட்டத்தில் தோல்வி கண்ட சையிட் சாடிக், 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோர்களை இலக்காகக் கொண்டு தமது தலைமையில் மலேசிய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பல்லினத்தவர்ளுக்கான மூடா கட்சியை 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடங்கினார்.
பெர்சத்து, பாஸ், அம்னோ உட்பட பல கட்சிகள் அங்கம் பெற்றிருந்த பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கு மத்தியில் மூன்றாவது ஓர் அரசியல் அணியாக மூடா விளங்க போகிறது என்றே கருதப்பட்டது.
அக்கட்சிக்கு இளையோர்கள் மத்தியில் நல்லாதரவு கிடைத்தது. பொதுவில் ஒரு மதிக்கத்தக்க கட்சியாக மூடா பார்க்கப்பட்டது. 15ஆவது பொதுத் தேர்தலில் இரண்டு கூட்டணிகளுக்கும் மிகப் பெரிய சவாலை மூடா கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இஃது அன்றைய பிரதமர் முகைதீன் யாசினுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது.
ஆனால், அதற்குள் முன்னதாகவே 2021ஆம் ஆண்டு, ஜுலை மாதம் தொடங்கி சையிட் சாடிக்கிற்கு எதிராக அடுக்கடுக்காக 4 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தபோது 10 லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகக் கூறி மொத்தம் 12 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி, நிதி முறைகேடு, சட்டவிரோத பணமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டன.
தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகள் மீதான வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டுகள் சிறை, 2 பிரம்படி, ஒரு கோடி வெள்ளி அபராதம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
முன்னதாக, தமது தலைமையிலான மூடாவைப் பக்காத்தான் ஹராப்பானில் ஓர் உறுப்புக் கட்சியாக இணைக்கும் முயற்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் , சபா ஆகிய ஐந்து மாநிலங்களில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப் போட்டியிட்டதில் மூவாரில் சையிட் சாடிக்கைத் தவிர இதர மூடா வேட்பாளர்கள் அனைவருமே தோல்வி கண்டனர்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் மூடாவின் துணைத் தலைவர் அமிரா அயிஷா மட்டுமே புத்ரி வங்சா தொகுதியில் வெற்றி பெற்றார். இவ்வாண்டு நான்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில்கூட ஒரு தொகுதியைக் கூட மூடா கைப்பற்றவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தமது ஆதரவை வழங்கிய சையிட் சாடிக், ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் ஒதுக்கப்பட்ட நபராகவே கருதப்பட்டார். அவருக்கு அமைச்சர் அல்லது இதர உயர் பதவி வழங்கப்படும் என்று கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
எதுவுமே நடக்காத நிலையில் துணைப் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான 47 ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்குச் சட்டத்துறை தலைவர் முறையான காரணத்தைச் சொல்ல தவறியதாகக் கூறி, ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தந்த ஆதரவைக் கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி மீட்டுக் கொள்வதாக சையிட் சாடிக் அறிவித்தார்.
தமக்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் மூடா கட்சியின் தலைவர் பதவியைத் துறந்து கட்சியின் ஓர் அடிமட்ட உறுப்பினராகத் தன்னைப் பிரகடனப்படுத்தி கொண்ட சையிட் சாடிக் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மீதான மேல்முறையீட்டில் வெற்றி பெறுவரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தம் மீதான நான்கு குற்றச்சாட்டு வழக்குகளும் முதலில் கோலாலம்பூர் மற்றும் ஜொகூர் பாருவில் கொண்டு வரப்பட்டன. ஜொகூர்பாரு வழக்கைக் கோலாலம்பூருக்கு மாற்றுவதில் சையிட் சாடிக் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர், செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்தவர் சையிட் சாடிக். ஒருவேளை இவ்வழக்கு விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு தமக்குப் பாதகமாக அமைந்து இருக்குமானால், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு உயர்நீதிமன்றம் நம்பிக்கை அளித்து இருக்கலாம். ஆனால், தற்போது தீர்ப்பு அளித்திருப்பது உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வலுவான ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டு இருப்பதால், நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எவ்வாறு அப்பீல் நீதிமன்றத்திலும், கூட்டரசு நீதிமன்றத்திலும் நிலைநிறுத்தப்பட்டதோ அதேபோன்ற ஒரு நெருக்கடியில்தான் சையிட் சாடிக் தற்போது இருக்கிறார் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மூடா கட்சியை சையிட் சாடிக்குடன் இரண்டறக் கலந்து பார்த்தவர்கள், அவர் தலைமையேற்காத மூடா கட்சியை நினைத்து பார்க்க முடியவில்லை என்கின்றனர். சமூக வலைத்தளங்களில் மூடா கட்சியை உயர் மட்டத்தில் கொண்டு சென்றவர் சையிட் சாடிக் ஆவார். படவரியில் (இன்ஸ்டாகிராம்) மட்டும் 20 லட்சம் பேர் அவரைப் பின்தொடர்கின்றனர். ‘டிக் டாக்கில்’ 12 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் மிகச் சிறந்த ஆளுமையைக் கொண்டு, மலேசிய அரசியல் வானில் வலம் வந்த சையிட் சாடிக், தனக்கு எதிரான தண்டனையை ரத்து செய்யும் மேல்முறையீட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அவரது அரசியல் வாழ்வு அஸ்தமனமாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையேல், பின்னடைவுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.