பொதுப் போக்குவரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மலேசியா அபரிவித வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இதற்குச் சிறந்த உதாரணமாக அண்மையில் பொதுப் போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எம்.ஆர்.டி’ இலகு இரயில் சேவையாகும்.

சாமானியர்கள் முதல் வசதியானவர்கள் வரை அனைவருக்குமான வசதிகளை அது கொண்டிருப்பதாகப் புகழப்படுகிறது. இதைத் தவிர பினாங்கில் இருந்து ஈப்போ வரையில் ‘கொம்யூட்டர்’ இரயில் சேவை, பல ஊர்களில் ‘மைபஸ்’ பேருந்து சேவைகள், தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் அதிவேக இரயில் சேவை என நாடு முன்னேற்றப் பாதையில் இருக்கிறது.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ‘ரேப்பிட் கே எல்’-இன் கீழ் இயங்கும் ‘ரேப்பிட்’ பேருந்து, ‘எம்.ஆர்.டி’ , ‘எல்.ஆர்.டி’, ‘மோனோரேல்’ ஆகிய இலகு இரயில் சேவைகளைப் பயன்படுத்த மின்னியல் கட்டணம் அதாவது Touch’n Go வழி My50 திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்வழி மாதத்திற்கு RM50 என்ற கட்டணத்துடன் வரம்பற்ற பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பெற முடியும். இது பயனர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் அமைந்ததாகும்.
ஆனால், ‘மோனோரேல்’ இலகு இரயில் வசதியை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு முடக்கி வைத்திருப்பதுதான் புரியாத புதிராகவே உள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் நிலையில் அவர்களுக்கான சிறப்பு வசதிகளைப் பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருவது வழக்கம்; அவசியமும் கூட.
‘மோனோரேல்’ இலகு இரயில் சேவை கேஎல் செண்ட்ரல் முனையத்தில் இருந்து தித்திவங்சா வரையில் செயல்படுகிறது. கேஎல் செண்ட்ரலில் இருந்து தித்திவங்சா வரை 10 மோனோரேல் நிலையங்கள் இருக்கின்றன,
அவை சில முக்கிய சாலைகளுக்கு மேலே மேம்பாலம் போன்று அமைந்துள்ளன. மேலே ‘மோனோரேல்’ நிலையத்திற்குச் செல்ல பொது மக்கள் நகர்படிகளைப் பயன்படுத்த வேண்டும். (ஏறுவதற்கு மட்டுமே, இறங்குவதற்கு அன்று)
ஆனால், மாற்றுத்திறனாளிகள், குறிப்பாகச் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மின் தூக்கி வசதி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழுதடைந்து அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இதனால், மாற்றுத்திறனாளிகள் ‘மோனோரேல்’ இலகு இரயில் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
கேஎல் செண்ட்ரல் முனையத்தை அடுத்து துன் சம்பந்தன், மகாராஜாலேலா, ஹங் துவா, இம்பி, புக்கிட் பிந்தாங், ராஜா சூலான், புக்கிட் நானாஸ், மேடான் துவான்கு, சவ் கிட், தித்திவங்சா என 10 ‘மோனோரேல்’ நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ 8 நிலையங்களில் இதே நிலைதான்.
ஆனால், ‘மோனோரேல்’ நிலையத்தினுள் இருக்கும் சிறு படிகளைக் கடப்பதற்குச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கான சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
‘மோனோரேல்’ இலகு இரயிலினுள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கை, சக்கர நாற்காலிகளில் வருவோரை நிறுத்தி வைக்க இட ஒதுக்கீடும், அதற்கான பாதுகாப்பு வார்ப்பட்டையும் இருக்கின்றன. ஆனால், அவற்றைப் பயன்படுத்த அவர்கள் முதலில் ‘மோனோரேல்’ நிலையத்திற்கு மேலே ஏறி வர வேண்டுமே !
அதற்கான மின் தூக்கிகள் பழுதான நிலையிலேயே பல ஆண்டுகளாகக் கைவிடப் பட்ட நிலையில் இருக்கின்றபோது, மேலே அமைந்திருக்கும் நிலையத்திலும், ‘மோனோரேல்’ இலகு இரயிலிலும் இத்தகைய வசதிகள் செய்து வைத்திருப்பது யாருக்காக ? யாருக்குப் பயன்பட போகின்றன ?
பார்வையற்றோர் பயணியாக வந்தால், அவர்களுக்கு உதவும் வகையில் ‘ரேப்பிட்கேஎல்’ நிறுவன ஊழியரோ அல்லது உதவி காவல்துறை அதிகாரியோ உடன் வருவது நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இது பாராட்டத்தக்க ஒன்று.
ஆனால், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் கதி ? உதவ இவர்கள் தயாராக இருந்தாலும், சக்கர நாற்காலியில் வருவோருக்கு மின் தூக்கி வசதி இல்லை என்றால் எவ்வாறு உதவ முடியும் ? குழந்தைகளின் தள்ளுவண்டிக்கும் இதே நிலைமை என்றும் சொல்லலாம்.
பழுதடைந்திருந்தால், தொடக்கத்திலேயே அதனைச் சரி செய்திருக்கலாமே. இவ்வாறு பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்தால், அதனைச் சரி செய்யும் செலவு பெரிதாகி விடாதா ? அந்தச் செலவைப் பயணிகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவதில் இருந்து ஈடுகட்டுவார்களா ? யாருடைய பொறுப்பற்ற தனத்திற்கு யார் தண்டச் செலவு செய்வது ?
துன் சம்பந்தன் மோனோரேல் நிலையம்
கே.எல் செண்ட்ரல் முனையத்தை அடுத்து இருக்கும் துன் சம்பந்தன் மோனோரேல் நிலையம் தரையாக, சாலை ஓரத்திலேயே இருக்கின்றது. அதன் பக்கத்திலேயே எம்.ஏ.பி எனப்படும் மலேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு அமைப்பு இருப்பதாலோ என்னவோ, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் முறையாக இருக்கின்றன.
மஹாராஜாலேலா மோனோரேல் நிலையம்
அடுத்ததாக இருக்கும் மஹாராஜாலேலா மோனோரேல் நிலையம். அங்கு மின் தூக்கி பழுதடைந்து இருப்பதோடு, தற்போது அந்த நிலையத்தின் கீழ் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், மின் தூக்கி இருக்கும் பகுதிக்குச் செல்ல முடியாத அளவுக்கு வழிகள் மூடப்பட்டுள்ளது.
ஹங் துவா மோனோரேல் நிலையம்
ஹங் துவா மோனோரேல் நிலையமானது ‘எல்.ஆர்.டி’ இலகு இரயில் நிலையத்துடன் இணைந்திருக்கும் இணைப்பு நிலையமாகும். மோனோரேல் என்பது பிரதான சாலைக்கு மேலே மத்தியில் அமைந்திருக்கும் மேம்பலத்தின் மீது செல்லும் இரயிலாகும். சாலையின் இரு புறமும் அதன் நுழைவாயில் இருக்கும். இந்த மோனோரேல் நிலையத்தைப் பொறுத்த வரையில், சாலையின் ஒரு புறம் இருக்கும் ஹங் துவா ‘எல்.ஆர்.டி’ நிலையம் வாயிலாகச் சுற்றிக் கொண்டு போய்விடலாம். ஆனால், மறுபுறத்தில் உள்ள நுழைவாயில் வழியாக மாற்றுத்திறனாளிகளும் வயதானவர்களும் செல்ல முடியாது. காரணம் அங்கும் மின் தூக்கி பழுதடைந்த நிலையிலேயே இருக்கின்றன.
மேலும், 5ஆவது மாடியில் இருக்கும் இந்த மோனோரேல் நிலையத்தை அடைய நகர்படிகளும் இல்லை. படிகட்டுகள் மட்டுமே இருக்கின்றன.
இம்பி மோனோரேல் நிலையம்
இந்த மோனோரேல் நிலையத்தில் இருக்கும் இரு மின் தூக்கிகளும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன, சாலையின் இரு புறங்களிலும் இரு பேரங்காடிகள் இருக்கின்றன. மூன்று மாடி உயரத்தில் இருக்கும் இம்பி மோனோரேல் நிலையத்தை அடைய மாற்றுத்திறனாளிகள் அந்த இரு பேரங்காடிகளுக்குள் சென்று மூன்றாவது மாடியை அடைந்தால் மட்டுமே இந்த மோனோரேல் நிலையத்திற்குள் செல்ல முடியும்.
புக்கிட் பிந்தாங் மோனோரேல் நிலையம்
இம்பி மோனோரேல் நிலையத்தை அடுத்து இருப்பது புக்கிட் பிந்தாங் மோனோரேல் நிலையம் முந்தைய நிலையம்போல் பேரங்காடிக்குப் பக்கத்தில்தான் அமைந்துள்ளது. இங்கும் மின் தூக்கி பழுதடைந்து கிடக்கிறது.
ராஜா சூலான் மோனோரேல் நிலையம்
இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மின் தூக்கி ஒரு நுழைவாயிலில், படிகட்டுகளுக்குப் பக்கத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் மறுபக்கத்தில் வழக்கமான மின் தூக்கி இருக்கிறது. அவை இரண்டுமே செயல் இழந்து கிடக்கிறது.
புக்கிட் நானாஸ் மோனோரேல் நிலையம்
இங்குச் சாலையின் ஒரு புறத்தில் மட்டுமே மின் தூக்கி இருக்கின்றது. ஆனால், வழக்கம்போல் செயல்படவில்லை.
மேடான் துவான்கு மோனோரேல் நிலையம்
இது ‘எல்.ஆர்.டி’ இலகு இரயில் சேவையை இணைக்கும் இணைப்பு நிலையமாகும். இங்குள்ள மின் தூக்கிக்கு முன்புறம், அதாவது மின் தூக்கி கதவுக்குப் பக்கத்திலேயே அடிக்கடி சில மோட்டர் சைக்கிள்கள் நிறுத்தப்படும் அவலமும் அரங்கேறுகிறது.
சவ் கிட் மோனோரேல் நிலையம்
இந்த மோனோரேல் நிலையம் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் நிலையமாகும். இப்போது அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே எம்.ஆர்.டி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் சவ் கிட் மோனோரேல் சேவையையும் ‘ரேப்பிட் கே எல்’ பேருந்து சேவையையும் நம்பி இருக்க வேண்டிய கட்டாயம். பல ஆண்டுகளாகவே இந்த மோனோரேல் நிலையத்தின் இரு மின் தூக்கிகளும் பழுதடைந்து, அதன் விசைகள் (பொத்தான்) இல்லாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
தித்திவங்சா மோனோரேல் நிலையம்
இறுதி முனையமாக மூன்றாவது மாடியில் அமைந்திருக்கும் தித்திவங்சா நிலையத்தில் இருந்து கீழே இறங்கும் மின் தூக்கியும் செயல்படவில்லை, நகர்படிகளும் இல்லை. படிகட்டுகள் மட்டுமே இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த ஆண்டிறுதியில், ‘ரேப்பிட் கே எல்’ நிறுவனத்தின் முயற்சியில் அனைத்து ‘எல்.ஆர்.டி’, ‘எம்.ஆர்.டி’, ‘மோனோரேல்” நிலையங்களில் பழுதடைந்துள்ள மின் தூக்கிகள், நகர்படிகள், விளக்குகள், இதர வசதிகள் என அனைத்தும் சரி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன எனப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது. இவ்வாண்டு (2023) இறுதிக்குள் பழுதடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் அனைத்தும் சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்திருந்தது.
அந்த அறிக்கைக்குப் பிறகு ஓராண்டை எட்டுகின்ற நிலையில், மோனோரேல் நிலையங்களில் மின் தூக்கி வசதிகள் இன்னும் பழுதடைந்த நிலையிலேயே இருப்பது திசைகள் அண்மையில் மேற்கொண்ட ஒரு விரிவான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளைத் தவிர்த்து அதிக தூரம் நடக்க முடியாத வயதானவர்கள், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் இந்நிலையங்களுக்கு வருவார்கள். நகர்படிகள் மட்டும் இருந்தால், எவ்வாறு அவர்கள் மேலே ஏறி முதல் தலத்திற்குச் செல்வார்கள்?
தித்திவங்சா போன்ற மிக உயரமான மோனோரேல் நிலையத்தில் இருந்து நகர்படிகளும் இல்லாமல் கீழே எவ்வாறு இறங்குவார்கள்?
இவ்வாறு பல அடிப்படை வசதி குறைபாடுகள் இருக்கின்ற நிலையில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசாங்கமோ அல்லது ‘ரேப்பிட் கே எல்’ நிறுவனமோ எவ்வளவு சலுகைகள் அறிவித்தாலும் அவை விழலுக்கு இறைத்த நீராகவே பயனற்றதாகிவிடும் என்று மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
போக்குவரத்து அமைச்சு கொடுத்த கால அவகாசம் அதாவது, இவ்வாண்டு இறுதிக்குள் மோனோரேல் நிலையங்களில் மின் தூக்கி வசதிகள் சீரமைக்கப்பட்டு விடுமா எனும் கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.
அதுவரையில், வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் மோனோரேல் நிலையங்களையும் அந்த இரயில் சேவையைச் சாலையோரத்தில் நின்று அண்ணாந்து பார்த்துவிட்டு மட்டும் போக வேண்டிய நிலையில்தான் இருக்குமோ என்று பலர் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
புதிய இரயில் போக்குவரத்திலும் நவீன இரயில் இயந்திரங்களை வாங்குவதிலும் தீவிர கவனமும் முன்னுரிமையும் வழங்கும் அரசாங்கம் மற்றும் அச்சேவையை நிர்வகிக்கும் நிறுவனங்கள் நடப்பில் உள்ள இத்தகைய குறைபாடுகளைச் சீர் செய்வதில் அதிக அக்கறை காட்டாதது ஏன் என்று அவர்கள் வினவுகின்றனர்.
இலகு இரயில் போக்குவரத்துச் சேவையில் அதன் பராமரிப்பு பணிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படாதது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே திசைகளின் எதிர்ப்பார்ப்பாகும்.