மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கே.டி.எம்.மிற்குச் சொந்தமான ரயில் வண்டிகளைப் பராமரிப்பதிலும், ரயில் இருப்புப் பாதைகளைச் சீர்படுத்துவதிலும் கோலாலம்பூர், செந்தூல் ரயில்வே ஊழியர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். செந்தூல் ரயில்வே பட்டறையில் பணியாற்றியவர்களின் 60 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர்.
இதேபோன்று ரயில் இருப்புப் பாதைகளில் ஏற்படக்கூடிய பழுதுகளைச் சரி செய்வதிலும், வளைந்து விட்ட தண்டவாளங்களை நேர்படுத்துதிலும், தண்டவாளங்கள் அவற்றின் ஆதாரத் தடத்திலிருந்து விலகி விடாமல், நட்டுகளை இறுக்குவதிலும் கனரக உபகரணங்களுடன் காணப்படுகின்றவர்கள் “கேங் மேன்” என்பார்கள். ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தண்டவாளம் பராமரிப்பு வேலைகளைச் செய்கின்றவர்களின் பங்கு அளப்பரியதாகும்.
இவ்வாறு பணிக்குச் செல்கின்றவர்கள், தங்கள் பணியின்போது, பயன்படுத்தும் கனரக உபகரணங்கள், தண்டவாளங்களுக்கு அடியில் படுத்திருக்கும் விஷ ஜந்துகள் போன்றவற்றினால் பேராபத்து ஏற்பட்டு விடாமல் இருக்க இந்த கேங்மேன் ஊழியர்களுக்குக் காவல் தெய்வமாகக் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆலயம் கொண்டு அருள்பாலித்து வந்தார் செந்தூல் ஸ்ரீ சிவராஜ முனீஸ்வரர்.
செந்தூல் பசாருக்கு அடுத்து கம்போங் ரத்தினப் பிள்ளைக்கும், ஜாலான் ஈப்போ நான்காவது மைல் பத்து கெண்டோன்மனுக்கும் இடையில் பத்து கேவ்ஸ்க்குச் செல்லும் ரயில் பாதை அருகில்தான் இந்த ஸ்ரீ சிவராஜ முனீஸ்வரர் ஆலயம் வீற்றிருந்தது.
கேங்மேன் ஊழியர்கள் கட்டம் கட்டமாகப் பணி ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆலயம் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் கே.டி.எம்-இல் பணியாற்றிய தினகரன் நடேசன், பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். 1982ஆம் ஆண்டு முதல் ஆலயத்தை மிக நேர்த்தியாகப் பராமரித்து வந்ததுடன் கே.டி.எம் ஊழியர்கள் மட்டுமின்றிச் சுற்றுவட்டார இந்துப் பெருமக்களுக்கும் இந்த ஆலயம், முக்கிய திருக்கோயிலாக விளங்கி வந்தது.
1995ஆம் ஆண்டுகளில் செந்தூல் ரயில்வே மின்சார ரயில் இரட்டைத் தண்டவாள நிர்மாணிப்புத் திட்டத்தில் ரயில் பாதையை அகலப்படுத்தும் பணியில் கே.டி.எம் ஈடுபட்டது. இதில் செந்தூலுக்கும் பத்துகேவ்ஸ்-கும் இடையிலான ரயில் பாதையை மின்சார ரயில் இரட்டை இருப்புப் பாதையாக விரிவுப்படுத்தும் திட்டத்தில் இந்த ஸ்ரீ சிவராஜ முனீவரர் ஆலயத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
செந்தூல் கேங்மேன் ஊழியர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயம் தமது வரலாற்றை இழந்து விடக்கூடாது, கேங்மேன் பிரிவில் பணியாற்றிய இந்திய ஊழியர்களின் பங்களிப்பு வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டும் என்பதற்கு ஸ்ரீ சிவராஜ முனீவரர் ஆலயம் மட்டுமே சாட்சியாக விளங்குகிறது.
இதனைக் கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக ஆலயத்தைப் பராமரித்து வந்த பெரியவர் தினகரன் நடேசன், முன்னெடுத்த பெரு முயற்சினால் கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சு வார்த்தையின் பலனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு செந்தூல் பாசார் மார்கெட் பின்புறம், கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியின் பெரிய கால்வாய்க்கு அருகில் ஓர் நிலம் ஒதுக்கி தரப்பட்டது.
அவ்விடத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு இடம் மாற்றப்பட்ட ஸ்ரீ சிவராஜ முனீஸ்வரர் ஆலயம், ஒரு தற்காலிக கட்டமைப்புடன் செந்தூல் வட்டார மக்களுக்குத் தொடர்ந்து அருள்பாலித்து வருகிறது. இந்துக்களின் ஒவ்வொரு விஷேச விழாக் காலங்களில் ஸ்ரீ சிவராஜ முனீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் புதிய இடத்தில் தொடர்ந்து வேரூன்றவும், வருகின்ற தலைமுறையினர் ஆலய வரலாற்றையும், அதன் பின்னணியையும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிப்படை வசதிகளுடன் சுமார் 2 லட்சம் வெள்ளி செலவில் திருப்பணிகள் நடைபெற்று ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகத்தை நடத்தி விட வேண்டும் என்று ந. தினராஜன் தலைமையிலான ஆலய நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இதற்கான பாலஸ்தான நிகழ்வும் கடந்த நவம்பர் ஒன்றாம் திகதி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தத் திருப்பணிக்குத் தேவைப்படக்கூடிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியைத் திரட்டுவதற்கு ஆலய நிர்வாகம் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளதாக ஆலயத்தின் காப்பாளர் தினகரன் நடேசன் கூறுகிறார்.
இந்தியர்கள் பெருவாரியாக வாழ்ந்த செந்தூல் வரலாற்றுடன் இரண்டறக் கலந்து விட்ட இந்த ஆலயம் தொடர்ந்து செந்தூல் வட்டார மக்களுக்கு அரணாக விளங்க வேண்டும் என்ற நோக்கில் கும்பாபிஷேகத்தை நடத்தி விட வேண்டும் என்பதில் தாங்கள் முழு முன்னெடுப்பை மேற்கொண்டு வருவதாகத் தினகரன் நடேசன் கூறுகிறார்.
இந்த ஆலயம் தொடர்பான மேல் விவரங்களைப் பெற விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்வதுடன் திருப்பணிக்கு நிதி அளிக்க விரும்புகின்ற அன்பர்கள் ஆலய வங்கிக் கணக்கில் தங்கள் நன்கொடையை வழங்கலாம் என்று தினகரன் நடேசன் தெரிவித்துள்ளார்.
தலைவர் தினராஜன் ( 018 2003377 ), செயலாளர் தேவேந்திரராஜன் ( 016 2093215 ), பொருளாளர் கணேஷ் ( 012 2735579 )
ஆலயத்தின் வங்கிக் கணக்கு எண்: P.P. Kuil Sri Siva Raja Muniswara Alayam, Public Bank Account : 3160835300