கெந்திங் மலை குளிர்ச்சியுடன் ஒட்டி உறவாடி, அந்தக் குளிரைத் தன் மீது போர்த்திக் கொண்டிருக்கும் ஒரு சிறிய ஊர் ஜண்டா பாயிக். மலாய்மொழியில் நல்ல விதவைப் பெண் என்று பொருள்படும். கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் இந்த ஊர் உள்ளது.
கோலாலம்பூரிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும், பகாங், பெந்தோங்கிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலும் ஜண்டா பாயிக் உள்ளது. கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் சாலையில் வலது, இடது புறத்தைப் பார்க்கலாம். அதற்கான வழிகாட்டிப் பலகைகளும் நெடுஞ்சாலையோரத்தில் காணப்படும்.
இந்த ஊரைப் பற்றி பலர் கேள்விப்பட்டாலும் அதன் பின்னணியை அறிந்திருக்கமாட்டார்கள். அதற்கான அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்காது. ஆனால், சிலாங்கூரைக் கடந்து பகாங்கிற்குச் செல்லும் சாலையில் ஜண்டா பாயிக் ஒரு முக்கிய ஊராகும்.
கோலாலம்பூர் போன்ற பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிப்பவர்கள், வார இறுதி நாள்களில் ஓய்வுக்காக, இயற்கை அழகை ரசிப்பதற்காக, அருவிகளில் குளிப்பதற்காக ஜண்டா பாயிக்கு வந்து செல்கின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மத்திய மலைத் தொடரான தித்திவங்சாவில் கடல் மட்டத்திலிருந்து 600 அடி முதல் 800 அடி உயரத்தில் ஜண்டா பாயிக் வீற்றிருக்கிறது. 1932ஆம் ஆண்டு இந்த ஜண்டா பாயிக் கிராமம் திறக்கப்பட்டதாக வரலாற்று குறிப்பு உள்ளது.
2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த ஜண்டா பாயிக் கிராமத்தில் 720 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2,800 பேர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவில் 22 செல்சியசுக்கும் குறைவாகவே தட்பவெட்ப நிலை உள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உட்பட பல வகையான அரிய தாவர வகைகளுக்கும், பூச்சி வகைகளுக்கும் ஜண்டா பாயிக் பிரசித்திப் பெற்றதாகும்.
ஜண்டா பாயிக் என்ற பெரிய கிராமத்தில் மலாய்ப் பாரம்பரியத்திலான நான்கு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த ஜண்டா பாயிக் கிராமம் உதயமாவதற்குப் பின்னணியில் பல கதைகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தில் உள்நாட்டுப் போரில் தங்கள் கணவர்களை இழந்த பலர் இந்தக் கிராமத்தில் தஞ்சம் புகுந்ததால் இந்த ஊருக்கு ஜண்டா பாய் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்னும் சிலர், இந்தக் கிராமத்தில் ஒரு விதவைப் பெண் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மிகவும் நல்லவர் என்றும் கூறப்படுகிறது. 1918ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடந்த போரில் உதவுவதற்குப் பகாங், தெமர்லோவில் இருந்து அதிகமான சிப்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் காயத்துடன் தங்கள் சொந்த ஊராக தெமர்லோவிற்குத் திரும்புவதற்கு முன்பு ஜண்டா பாயிக் கிராமத்தில் தங்கி இருக்கின்றனர். அவர்களில் காயமுற்ற சிப்பாய்களின் காயத்திற்கு மருந்திட்டு, அவர்கள் குணம் அடையும் வரையில் அந்த விதவைப் பெண் நன்கு கவனித்து கொண்டாராம்.
தெமர்லோவிற்குத் திரும்பிய சிப்பாய்கள், அந்த விதவைப் பெண்ணைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளனர். அந்த விதவையின் பெருமையின் காரணமாக இக்கிராமத்திற்கு ஜண்டா பாயிக் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஜண்டா பாயிக் கிராமத்தில் தொடக்கத்தில் குடியேறியவர்கள், சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெந்தோங்கைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பெந்தோங்கில் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களையும், தங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அருவிகள் நிறைந்த மலைப் பகுதியில் உள்ள இந்த ஜண்டா பாயிக் கிராமத்திற்கு இடம் பெயர்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தக் கிராமத்தை மூன்று ஹஜிகள் தோற்றுவித்ததாகப் பூர்வீக வரலாறும் உண்டு.
அந்த மூன்று ஹஜிமார்களின் உழைப்பினால் உருவான இந்தக் கிராமத்திற்கு ஜண்டா பாயிக் என்ற பெயருக்கு பதிலாக அந்த மூன்று பேரையும் நினைவுகூர, இக்கிராமத்திற்குக் கம்போங் தீகா ஹஜி என்ற பெயரைக் கிராம மக்கள் சூட்டினர்.
காலவோட்டத்தில் அந்தக் கிராமத்தின் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியது. 1932ஆம் ஆண்டு பகாங் சுல்தான், சுல்தான் அபு பாக்கார் அந்தக் கம்போங் தீகா ஹஜிக்கு வருகை புரிந்துள்ளார். கிராம மக்களைச் சந்தித்து விட்டு, அந்தக் கிராமத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வக்குடியினரான ஓராங் அஸ்லி மக்களையும் சுல்தான் சந்தித்துள்ளார்.
அப்போது ஜண்டா பாயிக் கிராமத்தைப் பற்றி பூர்வக்குடி மக்கள், சுல்தானிடம் விளக்கம் அளித்துள்ளனர். பூர்வக்குடி மக்களின் தலைவராக இருந்த தோக் பாத்தினுக்கும், அவரின் மனைவி சியாவிற்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவருடன் கொண்ட தகராற்றினால் மனைவி சியா, சேர்ந்து வாழ இயலாமல் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அந்தப் பெண் சென்ற பின்னர் பூர்வக்குடி மக்கள், மலைச்சாரலில் பயிர் செய்த நெய்பயிர்கள் காய்ந்து விட்டன. இதர தானிய பயிர் வகைகள் விளைச்சலின்றி அழிந்தன. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனியொரு நபராக அந்தப் பெண் கிராமத்திற்குத் திரும்பியபோது ஒரு விதவையைப் போல் காணப்பட்ட அவரை ஊர் மக்கள் நல்ல முறையில் வரவேற்றனர்.
செழிப்பற்றுக் கிடந்த மண் வளம் பண்பட்ட நிலமாக மாறியது. வாடிய பயிர்கள் மீண்டும் தழைக்கத் தொடங்கியது. ஊர் மக்கள் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத் தொடங்கினர். அந்தப் பெண்ணின் மறுபிரவேசம் கிராமத்தைச் செழிப்பானதாக மாற்றியது. இதன் காரணமாகவே அந்தக் கிராமத்திற்கு ஜண்டா பாயிக் என்று பெயர் சூட்டப்பட்டது.
பூர்வக்குடி மக்களின் இந்தக் கதையைக் கேட்டு, மனம் ஈர்க்கப்பட்ட சுல்தான், அந்தக் கிராமத்திற்குக் கம்போங் தீகா ஹஜி என்று சூட்டப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. ஜண்டா பாயிக் என்ற பெயரே நீடித்து நிலைப்பெற வேண்டும் என்று அங்கீகாரம் வழங்கினார்.
சுல்தானின் அங்கீகாரத்திற்குப் பிறகு அந்தப் பெயரே இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது விவசாய நடவடிக்கை வெகுவாகக் குறைந்த போதிலும் பல இடங்களில் மலையின் உச்சியிலிருந்து கருங்கல் பாறைகள் மீது சலசலவென்று ஆர்ப்பரித்தவாறு கொட்டும் அருவி நீர் சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஏழு அடுக்குகளாக நீரை கொட்டும் உலு தம்பிட் அருவி பலரைக் கவர்கிறது.
சுங்கை பெனுஸ், சுங்கை செரிங்கின், சுங்கை சும் சும், சுங்கை செம்பாரோ போன்ற ஆறுகள், ஜண்டா பாயிக்கில் பிரசித்திப் பெற்ற ஆறுகளாகும்.
மலையில் அடர்ந்த பச்சை காடுகள் மத்தியில் பல வகையான மூலிகைச் செடிகளின் ஊடே தவழ்ந்து வரும் இந்த ஆற்று நீரில் குளிப்பது புத்துணர்ச்சியைத் தருகிறது என்று இங்கு வருகை புரிகின்றவர்கள் நம்புகின்றனர்.
அரசாங்க உயர் பதவியில் இருந்தவர்கள் பலர் ஜண்டா பாயிக்கில் தனி லாட் நிலங்ககளை வாங்கி, அழகிய இயற்கைச் சூழலில் வீடுகளைக் கட்டிக் கொண்டு தங்களின் அந்திமக் காலத்தை நகர்த்திக் கொண்டு வருகின்றனர்.
இங்குப் பங்களா வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு, வீட்டின் பின்புறம் பரந்து காணப்படும் நிலத்தில் சுய தேவைக்குக் கஞ்சா செடிகளை வளர்த்து தனது மகனுடன் போலீசாரிடம் பிடிப்பட்ட முன்னாள் தூதர் ஒருவர் தொடர்புடைய சம்பவமும் இந்த ஜண்டா பாயில்தான் நிகழ்ந்தது.
1982ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சர் டான்ஸ்ரீ கஸாலி ஷாபி கோலாலம்பூரிலிருந்து பகாங், கோல லிப்பிஸிற்குப் பயணம் செய்த செஸ்னா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவமும் ஜண்டா பாயில்தான் நிகழ்ந்தது.
இங்குத் தங்கும் விடுதி அல்லது ‘ஹோம் ஸ்டே’ என்று சொல்லக்கூடிய நாள் வாடகைக்குக் கட்டப்பட்டுள்ள வீடுகள் அதிகமாக உள்ளன. இயற்கை விரும்பிகள் இங்கு வாரக் கணக்கில் தங்கி, இந்த மலைவாசல் கிராமத்தில் இயற்கைப் பொக்கிஷங்களை ரசித்து விட்டு செல்கின்றனர்.
இதற்காக நிறைய ஹோம் ஸ்டே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆஸ்பானா விலா, டி ஹட் ஜண்டா பாயிக், ராடியன் ரிட்ரீட்ஸ், எம்புன் லக்சரி விலா, விலா டி லினா போன்ற ஹோம் ஸ்டே வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. குடில் வடிவில் காணப்படும் இந்த ஹோம் ஸ்டே வீடுகள், அருவிகளின் அருகில் கட்டப்பட்டு இருப்பதால் சலசலவென ஓடும் நீரோடைகள் வருகையாளர்களுக்கு இதமான சுகத்தைத் தருகிறது.
ஒரு காலத்தில் ஜண்டா பாயிக் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அத்தகைய பயம் இல்லை. ஜண்டா பாயிக்கில் போலீஸ் நிலையமே இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜண்டா பாயிக்கில் நடைபெற்ற சட்டவிரோத வெட்டு மர நடவடிக்கையை இக்கிராமத்து மக்கள் முழு வீச்சில் எதிர்த்ததன் விளைவாக அந்தச் சட்டவிரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எல்லா நிலைகளிலும் ஜண்டா பாயிக் கிராமம் இயற்கை ரீதியாகப் பதிப்புறாமல் இன்னமும் ஓர் அழகிய கிராமமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதால் அந்தக் கிராமத்தின் தனித்துவமான அதிசயங்களை வெளிக்கொணர வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.