நாட்டில் மிகப் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாக 1919ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கோலசிலாங்கூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜெராம், புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமம், சிப்பாங், சுங்கை பீலேக்கிற்கு மாற்றப்பட்டு, அந்தப் புதிய தமிழ்ப்பள்ளி இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
எனினும், யானை மலை தோட்டம் என்று அழைக்கப்படும் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றுக் குறிப்புகள் சுங்கை பீலேக்கில் செயல்படும் புதிய தமிழ்ப்பள்ளியின் வரலாற்றுச் சுவட்டில் பதிக்கப்பட வேண்டும் என்று புக்கிட் ஈஜோக் தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
பள்ளி மாணவர்களும், வருகின்ற தலைமுறையினரும் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், கோலசிலாங்கூர், ஜெராம் வட்டாரத்தில் இப்படியொரு தமிழ்ப்பள்ளி செயல்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் இந்த வரலாற்றுப் பதிவு அவசியமாகும் என்று சமூக ஆர்வலர் வேலாயுதம் பெரியண்ணன் வலியுறுத்துகிறார்.
ஜெராம் பகுதியில் அமைந்துள்ள புக்கிட் செராக்கா தமிழ்ப்பள்ளியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்ததைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தில் அப்பள்ளி மூடப்பட்டு, அதன் உரிமத்தைச் சுங்கை பீலோக் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றுவதென முடிவு எடுக்கப்பட்டது.
யானை மலை என்று அழைக்கப்படும் புக்கிட் ஈஜோக் தோட்டம், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். செளதர்ன் ரியாலிட்டி மலாயா பெர்ஹாட்டிற்குச் சொந்தமான இந்தத் தோட்டம், மலைப்பகுதியில் அமைந்த காரணத்தினால் கொடிய விலங்கினங்கள் அதிகமாகக் காணப்பட்டன. யானைகள் நடமாட்டமிக்க தோட்டமாக விளங்கியதால் யானை மலை தோட்டம் என்று தமிழில் அழைக்கப்படுவதுண்டு.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அடிப்படை கல்வியைப் பெறும் வகையில் 1919ஆம் ஆண்டு ஸ்கூர்டாம் என்ற ஆங்கிலேயரால் இப்பள்ளி தோற்றம் கண்டது. பலகைகளாலும், தகரக் கூரையாலும் அமைந்திருந்த இப்பள்ளி அன்றைய நாளில் புக்கிட் ஈஜோக் தோட்ட அலுவலகத்திற்கு அருகில் இருந்தது.
1961ஆம் ஆண்டு அருகில் இருந்த மெர்பாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியுடன் கூட்டாக இணைக்கப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர், இன்று உயர்ந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார் வேலாயுதம்.
தொடக்க காலக்கட்டத்தில் புக்கிட் ஈஜோக் தோட்டப்பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. ஐந்து அல்லது ஆறாம் ஆண்டு கல்வியைத் தொடர மாணவர்கள் புக்கிட் செராக்கா தமிழ்ப்பள்ளி அல்லது காப்பார், மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி உட்பட சற்று தொலைவில் உள்ள பள்ளிகளில் உறவினர்கள் வீடுகளில் தங்கி படிக்கும் நிலை ஏற்பட்டது.
ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து வந்த புக்கிட் ஈஜோக் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகள் உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் 70 ஆண்டுகளில் சன் – சன் ஐஸ் கம்பெனி நிறுவனத்தால் நடத்தப்பட்ட தனியார் பேருந்து மூலம் கிள்ளான் ஹைஸ்கூல் வரை தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த பெற்றோர்களும் உண்டு.
நான்கு வரிசைகளில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் புக்கிட் ஈஜோக் தோட்டத்தில் வசித்து வந்தனர். 1970ஆம் ஆண்டுகளில் ஒரு வகுப்பறையில் கூடிய பட்சம் 25 மாணவர்கள் வரையில் பயின்ற காலமும் இருந்தது என்கிறார் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்ற 60 வயது ரத்னமணி ராஜு.
தலைமையாசிரியர் காரளன் என்பவர் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தவர். ஆசிரியர் சுப்பையா, பூங்காவனம், முனியாண்டி, ஜாலான் கூச்சிங்கிலிருந்து வரும் மலாய் ஆசிரியர் காசிம் ஆகியோரைத் தங்களால் மறக்க முடியாது என்று ரத்னமணி ராஜு கூறுகிறார்.
தோட்டப்புற வாழ்க்கை என்பதால் மாணவர்கள் பலர், நான்காம் ஆண்டு கல்வியுடன் 5ஆம் ஆண்டு கல்வியை வெளியில் சென்று கற்க முடியாத நிலை ஏற்பட்டது என்கிறார் 65 வயது மதுரை வீரன் காத்தான். அன்றைய நாளில் ஆங்கிலேயே தோட்ட முதலாளிகள், தோட்டப் பட்டாளிப் பிள்ளைகள் பயில்தற்குப் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டாலும், ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு தமிழ்ப்பள்ளி இருந்ததுள்ளது என்பதற்குப் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒரு சான்றாகும்.
1980ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்தில் வேலை செய்தவர்கள் பலர், தோட்டத்தை விட்டு கட்டம் கட்டமாக வெளியேற தொடங்கிவிட்டனர். தற்போது பத்து இந்திய குடும்பங்கள் மட்டுமே இந்தத் தோட்டத்தில் உள்ளனர். மற்றவர்கள் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் என்கிறார் 60 வயது லட்சம் முனியன்.
இத்தோட்டத்தைப் பற்றி பலர் மறந்தாலும் மலாயாவில் தொடங்கப்பட்ட தொடக்க கால தமிழ்ப்பள்ளிகளில் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். இப்பள்ளியின் வரலாறு அழிக்கப்படாமல், சிப்பாங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று 63 வயது கலைமகள் காத்துமுத்து தெரிவித்தார்.
80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த இப்பள்ளியில் ஆகக்கடைசியான ஓர் இந்தோனேசிய மாணவர் உட்பட 3 மாணவர்களே பயிலும் நிலை ஏற்பட்டது. இதனால், இப்பள்ளி மூடப்பட வேண்டிய அபாயத்தை எதிர்நோக்க நேர்ந்ததாகக் கலைமகள் கூறுகிறார்.
சுங்கை பீலேக் தமிழ்ப்பள்ளி தொடர்ந்து புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி என்ற பெயரில் செயல்படுவது தங்களுக்குப் பெருமையாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு தோட்டத்தில் செயல்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளி தோட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் வெற்றிகரமாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள அன்றைய நாளில் அடித்தளமிட்டது. அப்பள்ளியை மறவாமல் இருக்க சுங்கை பீலேக்கில் உள்ள புதிய தமிழ்ப்பள்ளியில் புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வரலாறு பதிக்கப்பட வேண்டும் என்று தோட்ட மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.