கடுமையான காலக்கட்டத்தில்நாடி வந்த பட்டம்

இவ்வாண்டின் 27- ஆவது பட்டமளிப்பு விழா யூனிமாஸ் எனப்படும் மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி நவம்பர் வரை நான்கு நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கு தங்களின் பெற்றோர்களுடன் கை கோர்த்து வந்திருந்தனர். தங்களின் லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கு இளங்கலை பட்டம் பெற்ற சில இந்திய மாணவர்கள், திசைகளுடன் தங்களின் எண்ண அலைகளையும் சுவாரஷியங்களையும் சுவைப்பட பகிர்ந்து கொண்டனர்.

எல்லையில்லா கல்வியின் சிகறத்தை தொடுவதற்கு பல்வேறு குடும்ப பின்னணிகளை அவர்கள் கொண்டிருந்த போதிலும் ஒரு பட்டதாரியாக வர வேண்டும் என்ற இலக்கை நோக்கி அவர்கள் காலடி எடுத்து வைத்து தங்கள் லட்சியத்தை நிறைவு செய்ததில் பெருமிதம் தெரிவித்தனர்.

லோகேஸ்வரி பன்னீர்செல்வம், கெமெஞ்சே
என் குடும்பத்திலேயே நான் மட்டும்தான் கடல் கடந்து அரசாங்க உயிர்கல்விக் கூடத்தில் பயில வந்த மூத்த பெண் குழந்தை. நடுந்தர குடும்பத்திலிருந்து கடல் கடந்து படிக்க வருவது அவ்வளவு சுலபம் அல்ல. தொடர்பு வியூகத் துறையில் 4 ஆண்டுகள் மலேசிய சரவாக் பல்கலைகழகத்தில் பயின்றேன். கல்லூரியில் படிக்க சென்ற சில மாதத்திலேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு என் சகோதரியை இழந்தேன். பிறகு இரண்டு வருடம் கழித்து என் அம்மாவும் நோய்வாய்பட்டு இறைவனடியில் சேர்ந்தார். இந்த துயரங்களுக்கு மத்தியில் என்னால் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

காரணம் குறுகிய இடைவெளியில் தங்கையையும் அம்மாவையும் இழந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். அப்பாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவ்வளவு தூரம் சென்று படிக்க வேண்டாம் பாதிலேயே படிப்பை நிறுத்திவிடு என்றும் பலர் எனக்கு அறிவுறுத்தினர்.
ஆனால், கல்வி ஒன்றே பிரதானம். அந்த கல்வியை பெற்றுவிட்டால் எதனையும் சாதிக்க முடியும். எதிர்காலம் சிறப்பாக அமையும். வேதனை என்பது குறுகிய காலமே. ஆனால், சாதனை என்பது நேடும் பயணமாகும். அந்த பயணத்தை உரிய வயதிலேயே தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும். சாதனையை பெறமுடியும் என்று என் தந்தை பன்னீர்செல்வம் கொடுத்த ஊக்குவிப்பினாலும் ஆதரவினாலும் உயர்கல்வியை தொடர உந்துதலாக இருந்தது.
நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பல எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சமாளித்து, மனதை திடப்படுத்திக் கொண்டு படித்து முடித்தேன்.

இன்று தொடர்பு வியூகத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றேன். என் அம்மாவும் தங்கையும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னுடன் இல்லை என்பதே பெரும் கவலையாகும், துயரமாகும். ஆனாலும், அவர்களின் வணக்கமும் ஆசீர்வாதமும் பாரட்டும் எப்போதுமே எனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் ஒரு பட்டதாரிக்கான அங்கீகார சான்றிதழை இன்று பெற்றுள்ளேன்.

ரனிஷா காளியப்பன், பினாங்கு

அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அரசாங்க உயர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். முதலில் எனக்கு மொழியியல் துறையில்தான் பயில வாய்ப்பு கிடைத்தது. சரவாக் மொழி எனக்கு பெரும் சவாலாக இருந்த காரணத்தினால் தொடர்பு வியூகத் துறையில் பயில்வதிலிருந்து மாற்றம் செய்து கொண்டேன். குறிப்பாக, சரவாவில் கலாச்சார வர்த்தகத் தளங்கள், மாறுபட்ட மொழி, புதிய இடம், சூழல் போன்றவை எனக்கு பெரும் சவாலாக இருந்தன. உயிர் நண்பர்களான லோகேஸ், டிவ்யா, டான்யா, புவனேஸ் ஆகியோர் எனக்கு உயர்பல்கலைக்கழக காலத்தில் மிகவும் பக்கப்பலமாக இருந்தனர். ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்றம் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. பின் தங்கிய நிலையில் இருந்த நான் மற்ற நண்பர்களை போன்று ஒரே நேரத்தில் இளங்கலை பட்டம் பெற விரும்பினேன். சரவாக் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் என் பெற்றோர்களின் ஆதரவினாலும் பின்வாங்காமல் நான்கு வருடம் கடுமையாக படித்து முடித்து இன்று ஒரு பட்டதாரியாக நின்று கொண்டிருக்கிறேன். என் அப்பாவின் கனவும் நனவாகிவிட்டது என்பதில் பெரும் மகிழ்ச்சியே.

புவனேஸ்வரி முருகாசு, ஈப்போ
ஒரு பட்டதாரியாக ஆனது, என் அம்மாவுக்குக் என்னால் கொடுக்க முடிந்த சந்தோஷமாக இந்த வெற்றியைக் காண்கிறேன். தனியொரு பெண்ணாக புதியதொரு சூழல், புதியதொரு மக்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். வீட்டில் மூன்று வேளை அம்மா சமைத்து சாப்பிடும் நிலைபோல் கல்லூரியில் இருக்காது. நடுந்தர குடும்பத்திலிருந்து இவ்வளவு தூரம் சாதிக்க வந்ததால் பணம் சிக்கலை தவிர்ப்பதற்கும் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டும்தான் சோறு சாப்பிட்டு மற்ற நேரங்களில் ரொட்டி, பிஸ்கட் சாப்பிட்டு வகுப்பிற்கு சென்ற காலங்களும் இருந்தன. தொடர்பு துறையில் நான் யாரென்று தெரிந்து கொள்ள இந்த பல்கலைக்கழகம் எனக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றது. பள்ளிக்காலங்களில் மற்றவர்களின் முன்னிலையில் எதிர்த்து பேசமுடியாமல் தயங்கிய நான் தனியொரு பெண்ணாக விமானத்தில் சென்று கல்லூரி பயிலும் சூழ்நிலைக்கு என்னை தயார்படுத்திக் கொடுத்தது சரவாக் பல்கலைக்கழகம்.
புதிய அனுபவத்தையும் பெரும் அறிவையும் தந்த சரவாக் பல்கலைக்கழகமே நீ வாழ்க. என்னைப்போல் பல கல்வி செல்வங்களை நீ தர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

சாரா அன் ஜெயராஜன், சிரம்பான்

முதல் வகுப்பில் உலகளாவிய ஆங்கில தொடர்புத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றத்தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.டி.பி.எம் கல்விக்குப் பிறகு என்னுடைய முதல் தேர்வாக இந்த துறை கிடைக்கப்பெற்றது. இரண்டு ஆண்டுகள் மட்டுமே பல்கலைக்கழகம் சென்று பயில வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு இரண்டு ஆண்டுகள் கொரோனாவினால் வீட்டிலேயே இருந்து இணையம்வழி பயின்றேன். முதலாவது பெண்ணாக என் குடும்பத்திலிருந்து வெளியே வந்து தூரமாக படிக்க விரும்பினேன். என்னுடைய பெற்றோர்களும் என் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் முழு ஆதரவினை வழங்கினர். என் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்வதற்காக படிப்பிற்காக அயராது உழைத்தேன். என்னுடைய பேராசிரியர்களும் உயிர் நண்பர்களான ரஷ்மிதா, புவனேஸ் பக்கப்பலமாக இருந்தனர். கடவுளுக்கும் இவ்வேளையில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்று சந்தை மற்றும் தொடர்புத்துறை மூத்த நிர்வாகியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடுமையான உழைப்பும் சாதிக்க வேண்டும் என்கிற குறிக்கோளும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
இவர்களை போன்றே நமது இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று தாங்கள் படித்த பள்ளிக்கும், குடும்பத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளனர். இந்த பட்டதாரி மாணவர்களில் பலர் கொரொனா காலத்தில் கல்வியை தொடர முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கிடையில் இணையம்வழி கல்வியை தொடர்ந்ததால் பெரும் சவால்களை சந்தித்தனர்.
ஒரு கடுமையான காலக்கட்டத்தில் தங்களால் பட்டதாரியாக வர முடியுமா என்று சந்தேக கண்களோடு நின்ற இவர்கள் இன்று சந்தோஷக் கண்களோடு இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கள் குடும்பத்தினரோடு பார்க்க முடிந்தது.

WATCH OUR LATEST NEWS