உலகிலேயே 24 மணி நேர ஒலிப்பரப்பை தொடங்கிய முதல் வானொலி என்ற பெருமைக்குறிய மின்னல் பண்பலை, சமூகம், கலை, இலக்கியம், கேளிக்கை உட்பட இந்தியர்களின் நலன் சார்ந்த பல்வேறு துறைகளில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
1970 ஆம் ஆண்டுகளில் ரங்காயான் மேரா என்ற பெயரில் செயல்பட்ட மலேசிய தமிழ் வானொலி ஒலிப்பரப்பு பின்னர் வானொலி 6, அதன்பின்னர் வானொலி அலைவரிசை 6 ஆகிய பெயர்களில் செயல்பட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மின்னல் பண்பலை என்ற பெயரில் சீரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
வானொலி தமிழ் ஒலிப்பரப்பின் பெயர்கள் பல்வேறு காலங்கட்டங்களில் புதிய பரிணாமத்தைப் பெற்றாலும் அதன் பெருமைகளுக்குச் சிகரம் வைத்தது போல அமையக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளின் வானொலி நாடகமும் ஒன்றாகும்.
பல்லாயிரக்கணக்கான நேயர்கள் விரும்பி கேட்கக்கூடிய ஓர் அங்கமாக வானொலி நாடகம் விளங்கி வருகிறது. அதன் தடத்தை உறுதி செய்வதில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தங்களின் அரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது வானொலி நாடகத்திற்கு பொறுப்பேற்றியிருப்பவர் காயத்ரி கண்ணம்மா ஆவார். கடந்த 3 ஆண்டு காலமாக வானொலி நாடக தயாரிப்பிற்கு பொறுப்பேற்றுள்ள காயத்ரி கண்ணம்மா கெடா, கூலிமில் பிறந்து வளர்ந்தவர்.
கைலாசம் காத்தமுத்து – லெட்சுமி குப்பன் தம்பதியரின் மகளான காயத்ரி தமது தொடக்கக் கல்வியை வெல்லஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியவர்.
பாயா பெசார் இடைநிலைக்கல்வியை முடித்த பின்னர் பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் திரைப்பட, கேளிக்கை நிகழ்வுகள் தயாரிப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவராவர்.
ஆஸ்திரோ, சிங்கப்பூர் மீடியா கோர்ப் ஆகியவற்றில் நாடக தயாரிப்பு நிர்வாகத்தில் பறந்த அனுபவத்தை பெற்றவரான காயத்ரி கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசிய வானொலி தொலைக்காட்சி ஒலிப்பரப்பான ஆர்.டி.எம் – மின் மின்னல் பண்பலையில் தம்மை பிணைத்துக் கொண்டார்.
மிக சவால் நிறைந்த பணியான வானொலி நாடக தயாரிப்பில் தாம் ஏற்கனவே பெற்ற அனுபவங்களே தற்போது தமக்கு வழிகாட்டலாக அமைந்துள்ளது என்கிறார் காயத்ரி. வானொலி நாடக தயாரிப்பில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் பொறுப்பேற்றுள்ள காயத்ரி எழுத்துப் படிவங்கள், கலைஞர்கள் தேர்வு, இயக்குதல், தொகுத்தல், தயாரிப்பு ஆகிய பணிகளை இவர் ஒருவரே கவனிக்கிறார்.
வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஆகிய தயாரிப்பு பணிகள் முற்றிலும் மாறுபட்டவையாகும். காரணம், வானொலி நாடக தயாரிப்பதற்கு அனைத்து வேலைகளும் ஒருவரே மேற்கொள்ள வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக தயாரிப்புக்கு முந்திய, தயாரிப்புக்கு பிந்திய பணிகள் ஒரு நபரே மேற்கொள்ள வேண்டும் என்கிறார் காயத்ரி.
மின்னல் பண்பலையில் ஒளியேறும் அமுதே தமிழே, ஹெல்லோ மின்னல், சிறுகதை போன்ற நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு தனி தனி தயாரிப்பாளர்கள் இருக்கின்றார்களோ அதுப்போலவே வானொலி நாடகத்திற்கு நான் பொறுப்பேற்றுள்ளேன்.
வானொலி நாடகம் என்பது ஓர் அரைமணி நேர நிகழ்ச்சியாகும். ஒரு வாரத்திற்கு ஒரு எழுத்து படிவத்தின் கதை மட்டுமே பயன்படும். இவ்வாறு படைக்கப்படும் வானொலி நாடகம் 5 முதல் 6 வரை நல்ல குரல் வளம் கொண்ட கலைஞர்களை தேட வேண்டும். கதைக்கு ஏற்ற கலைஞர்களை தேர்வு செய்வதும் அவர்களை இயக்குவதும் கதைக்குப் பின்னணிகள் இடை இடையே இசைகள் சேர்ப்பதும், நிகழ்ச்சியை தயாரிப்பதும் அதனை மிக சிறப்பாக படைப்பதும் சவால் நிறைந்த பணியாகும்.
ஒலிப்பரப்புக்கு தேர்வுசெய்யப்படும் எழுத்துபடிவம் 3 மாதங்களுக்கு முன்பே சார்ந்துவிடும். பின் 2 வாரங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுவிடும். 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வானொலி நாடக ஒலிப்பரப்பிற்கும் இப்பொழுது எடுக்கப்படும் வானொலி நாடக ஒலிப்பரப்பும் மாறுபட்டவையாகும்.
உதாரணத்திற்கு, முன்பு அவ்விடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்தனர். நடக்கும் சத்தம், காற்று வீசும் சத்தம் இதுபோன்று நேரடியாக ஒலிப்பதிவு செய்துவருவர். ஆனால், இன்று நவீன வளர்ச்சி காரணத்தினால் வானொலி நாடகத்தை தணிக்க செய்வது இலகுவாகிவிட்டது.
மலேசியாவில் வானொலி நாடகம் என்பதை மின்னல் பண்பலை மட்டும் செய்வதால் மக்களின் ஆதரவும் கதைகளை கேட்கும் ஆர்வமும் அதிகமாகவே உள்ளன. வலையொளி வாயிலாக மக்களின் விருப்பத்தினையும் இன்னும் வானொலி நாடகத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
குடும்பம். காதல், திகில், பாரம்பரியம் கலந்த 4 வித கதைகளாக வானொலி நாடகம் கேட்கும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
மலேசியாவில் தயாரிப்பு நிர்வாகியாக வானொலி நாடகத்தில் பணிபுரிபவர்கள் தயாரிப்பாளராகவும், லைன் புரோடியூசராகவும் இருப்பர்.
நரன், கல்யாணம் டூ காதல், பேய் வேட்டை, சுகமாய் சுப்புலச்ஷ்மி, அடை மழை காலம் போன்ற தொடர் மற்றும் திரைப்படங்களின் தயாரிப்பு நிர்வாகியாக நான் இருந்துள்ளேன். குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் ஒரு கதைக்கான வானொலி நாடகத்தை குரல் பதிவு செய்திட வேண்டும். அதிகமான நேரத்தை குரல் பதிவிற்கு செலவிட்டால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு பட்ஜெட் பாதிப்படையும்.
திகில், மர்ம கதைகளை சார்ந்த வானொலி நாடகமாக இருந்தால் அதனை தொகுக்க அதிகமான நேரம் தேவைப்படும். சில சமயங்களில் ஒருநாள்வரை செலவிட நேரிடும். அதுவே காதல், இலக்கியம், குடும்பம் சார்ந்த கதைகளாக இருந்தால் 5 மணி நேரத்திற்குள் தொகுத்து முடித்திட முடியும்.
ஏறக்குறைய 100 க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களுக்கு நான் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஒரு குரல் பதிவு கதையினை தொகுக்கும் போது சிந்தனை மிகவும் தெளிவாகவும் பல கோணங்களில் யோசிக்கும் ஆற்றல் மிகுந்தவையாகவும் இருக்க வேண்டும். ஒரு படத்தை எடுப்பதைப்போல் அந்த உணர்வினை கொண்டிருந்தால் மட்டுமே வெற்றிகரமாக ஒரு கதைக்கான குரல் பதிவை தொகுக்க முடியும்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்களில் வானொலி நாடகத்திற்கான குரல் பதிவுவை முன்கூட்டியே தயார்நிலையில் இருந்திட செய்திடுவேன்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தொழிற்நுட்ப சார்ந்த வேலைகளை மேம்படுத்திக் கொள்வதோடு சுயமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றிணை அமைக்க திட்டமிட்டுள்ளதாக காயத்ரி கூறினார்.
வளர்ந்து வரும் இளையோர்கள் வானொலி நாடகத்தில் நடிக்க விரும்பினால் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது என்றும் காயத்ரி நம்பிக்கை தெரிவித்தார்.