கோல குபு பாரு, மே 10-
PAS கட்சி அங்கம் வகிப்பதற்காக, இந்திய சமூகத்தினர் பெரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத்-ட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என கூறப்படுவதை, PAS கட்சியின் சமய மன்ற தலைவர் ஹாசிம் ஜாசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இஸ்லாமிய தலைமைத்துவம் மீதான இந்திய சமூகத்தினரின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
அதன் வெளிப்பாடாக, நாளை நடைபெறவுள்ள கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பெரிக்காதான் நசியனால் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அச்சமூகத்தினர் வாக்களிப்பார்கள் என ஹாசிம் ஜாசின் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இஸ்லாமிய தலைமைத்துவத்திடம் காணப்படும் நேர்மை, நிலைத்தன்மை, நம்பிக்கை ஆகிய கூறுகளை உணர்ந்துள்ள இந்தியர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
PAS கட்சிக்கு இந்தியர்களின் ஆதரவைப் பெற்று தருவதில், PAS ஆதரவு பேரவை DHPP முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. PAS தலைமைத்துவத்துடன் அப்பேரவை நல்லதொரு நட்புறவைக் கொண்டுள்ள நிலையில், அதன் தலைவருக்கு செணட்டர் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், PAS கட்சியுடன் நீண்டகாலமாக இருந்துவரும் DHPP பேரவை, நிச்சயம் இந்திய சமூகத்தினரின் ஆதரவை, தங்கள் கட்சிக்கு பெற்றுத் தருமென ஹாசிம் ஜாசின் குறிப்பிட்டார்.