பெர்லிஸ் , மே 23-
போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கோரியதாக பெர்லிஸ் மந்திரி பெசார் சுக்ரி ரம்லி –யின் மகன் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் மந்திரி பெசார் பதவி விலக வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமது புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டார்.
பாஸ் கட்சித் தலைவர்கள், இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது, அவர்கள் கூறுகின்ற ஒரே பதில், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதாகும். தவிர நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது தனது மகனே தவிர பெர்லிஸ் மந்திரி பெசார் அல்ல என்று அவர்கள் தங்களை தற்காக்கலாம்.
ஆனால், சுக்ரி மந்திரி பெசாராக இல்லாமல் இருந்து இருக்குமானால், இப்படியொரு குற்றம் நிகழ்ந்து இருக்காது என்பதால் இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகுவதே உத்தமம் என்று புவாட் சர்காஷி தெரிவித்தார்.