காஜாங், மே 23-
குண்டர் கும்பலில் சேர்வதற்கு மறுத்ததால் மாணவன் ஒருவனை கண்மூடித்தனமாக தாக்கியதாக நம்பப்படும் காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 க்கும் 18 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஏழு மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.
கடந்த மே 16 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் அந்த இடைநிலைப்பள்ளியில் பயிலும் 13 வயது மாணவனை தடுத்து நிறுத்திய மாணவர் கும்பல் ஒன்று, சராமாரியாக தாக்கியதுடன் சட்டவிரோத இயக்கத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து தலையில் காயத்திற்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவன் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த 7 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் குறிப்பிட்டார்.