ஜொகூர் பாரு, மே 27-
போதைப்பொருள் உட்கொண்டு கார் மற்றும் வீட்டின் கண்ணாடியை உடைத்ததாக ஆடவர் ஒருவர் மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
47 வயது தியோ ஹாக் லாய் என்கிற அந்த ஆடவர் மாஜிஸ்திரேட் ஃபதீன் தலிலா காலித் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
ஏற்கனவே, அவ்வாடவர் மீது போதைப்பொருள் தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்த வேளை, மாஜிஸ்திரேட் முன்னிலையில் தாம் மருந்து மட்டுமே உட்கொண்டு வந்ததாகவும் போதைப்பொருள் எதுவும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 427 ஆவது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த மே 25 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணியளவில் ஜொகூர், ஜாலான் பக்காரியா -வில் இக்குற்றத்தைப் புரிந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன.