கோலாலம்பூர், மே 27-
மலேசியாவின் பிரபல சமையல்கலை நிபுணர் செஃப் வான் என்ற டத்தோ ரெட்சுவான் இஸ்மாயில், பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் – யின் ஆடையை, தைப்பூச உற்சவத்தின்போது எடுக்கப்படும் காவடியுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது வரம்புமீறிய செயலாகும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் தலைவர் டத்தோ N. சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செஃப் வான் – னின் நோக்கம் நகைச்சுவையைத் தவிர வேறோன்றுமில்லை என்றாலும் அதை இந்திய சமூகத்தினரால் குறிப்பாக, இந்துப் பெருமக்களால் அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
நன்கு மதிக்கப்படுபரான செஃப் வான், தன்னுடைய நன்மதிப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களின் மனதை புண்படுத்தக்கூடிய செயலில் ஈடுபடக்கூடாது என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.
உண்மையிலேயே இதில் நகைச்சுவை இழையோடும் விஷயம் என்னெவென்று தெரியவில்லை. ஆனால், நகைச்சுவை என்ற போர்வையில் ஒரு நடிகையின் ஆடையை, இந்துக்கள் போற்றும் பத்துமலைத்திருத்தல தைப்பூச காவடியுடன் ஒப்பிட்டு பேசுவது கண்டிக்கத்தக்கதாகும்.
தைப்பூச கொண்டாட்டத்தின் அடையாளமாக விளங்கும் மயிலுடன் ஒப்பிட்டு, ஐஸ்வர்யா ராய் – யின் ஆடையை செஃப் வான், உவமைக்காட்டி பேசியிருக்கலாம். ஆனால், இவ்வாறு நகைச்சுவையாக உவமைக்காட்டுவது மிகப்பெரிய தவறு, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்பதை ஒரு சமையல் கலை நிபுணராக விளங்கும் செஃப் வான் அறிந்திருக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
தன்னுடைய செயலுக்கு செஃப் வான் பல காரணங்கள் கூறுலாம். ஆனால் இது விளையாட்டான விஷயம் அல்ல. இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக அந்த சமையல் கலை நிபுணர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் மலேசியா கெசட் வழங்கிய பேட்டியில் கேட்டுக்கொண்டுள்ளார்.