மலேசிய பத்திரிகை சுதந்திரம் குறியீட்டுத் தரம் வீழ்ச்சி, பொருட்படுத்த வேண்டியதில்லை

கூச்சிங், மே 27-

அரச பரிபாலனம், இனம், சமயம் சம்பந்தப்பட்ட 3 R விவகாரத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு மற்றும் கடும் நடவடிக்கைகளினால் உலக பத்திரிகை சுதந்திரம் குறியீட்டுத் தர வரிசையில் மலேசியா பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சரவாக், கூச்சிங்கில் இன்று திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊடகவியலாளர்கள் தினமான ஹவானா 2024 இல் பிரதான உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Reporters Without Borders என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் சர்வதேச கண்காணிப்பு அமைப்பினால் அறிவிக்கப்பட்ட மலேசியாவின் பத்திரிகை சுதந்திர குறியீட்டு தர வரிசை வீழ்ச்சியுற்று இருப்பது குறித்து பேசிய பிரதமர், அந்த சர்வதேச அமைப்பு, மலேசியாவிற்கு எதிராக கூறியுள்ள குறைநிறைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றார்.

ஆனால், அரச பரிபாலனம், இனம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்களை அரசாங்கத்தினால் வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடும், கடும் நடவடிக்கைகளும் இல்லையென்றால் அவை இன மோதல்களுக்கும், சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கமற்ற சூழலுக்கும் வித்திடும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

அரசாங்கத்தின் இத்தகைய உறுதியான நிலைப்பாட்டினால் அந்த RSF சர்வதேச அமைப்பின் குறைகூறல்களுக்கு மலேசியா இலக்காவது இயல்பே என்று அதன் ஆசியா- பசிபிக் பிராந்தியத்திற்கான இயக்குநர் செர்ட்ரிக் அல்வியானி-யை மேற்கோள்காட்டி பிரதமர் பேசினார்.

இதனிடையே இந்நிகழ்வில் பேசிய தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பட்சில், கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுயேட்சையான மலேசிய பத்திரிகையாளர் மன்றம் அமைக்கப்படும் முயற்சி, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
மிக கோலாகலமாக நடைபெற்ற ஹவானா2024 இல் செய்தி ஆசிரியர்கள், நிருபர்கள் உட்பட சுமார் ஆயிரம் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

WATCH OUR LATEST NEWS