பெட்டாலிங் ஜெயா, மே 31-
இலக்கிடப்பட்டவர்களுக்கு டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டம் இவ்வாண்டு அமலாக்கம் காண்பதற்கான ஆருடத்தை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் வெளிப்படுத்தியுள்ளார்.
உரிய தரப்பினருக்கு அந்த உதவித்தொகை முறையாக சென்று சேர்வதை உறுதிபடுத்த அனைத்து அமைச்சுகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, அத்திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
குறிப்பாக, டீசலை கடத்தும் நடவடிக்கைகளை முறியடிக்கவும் அதிக ஆதாயத்தைப் பெறுவதற்காக, வியாபாரிகள் அவற்றை பதுக்கிவைப்பதை தடுக்கவும் அமலாக்க ரீதியிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றாரவர்.
அண்மையக் காலமாக நாட்டில், உதவித்தொகை வழங்கப்பட்ட டீசல்களை கடத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துவருவதால், நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் டீசலுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை 1.4 பில்லியன் வெள்ளியாக இருந்த வேளை, 2019ஆம் ஆண்டில் அது 10 மடங்கு அதிகரித்து 14.3 பில்லியன் வெள்ளியாக பதிவாகியுள்ளது.
மலேசியாவைவிட, அண்டை நாடுகளில் டீசல் விலை அதிகமாக உள்ளதால், நம் நாட்டிலிருந்து டீசல்கள் கடத்தி செல்லப்படுகின்றன.
அதற்கு முற்றுப்புள்ளியை வைக்கவே அரசாங்கம், இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசலுக்கான உதவித்தொகையை வழங்க முடிவெடுத்திருப்பதாக, அமீர் ஹம்சா குறிப்பிட்டார்.