சவால்களுக்கு மத்தியில் அன்வார்-ரின் அடைவுநிலை சிறப்பாக உள்ளதாக தெங்கு ரசலெய்க் ஹம்சா கூறுகிறார்

கோலாலம்பூர், மே 31-

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பெரும் சவாலை எதிர்நோக்கினாலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மின் அடைவுநிலை சிறந்த முறையில் உள்ளதாக, அம்னோ மூத்த தலைவர் டான் ஸ்ரீ தெங்கு ரசலெய்க் ஹம்சா புகழ்ந்துரைத்துள்ளார்.

ரிங்கிட்டின் சரிவு, பணவீக்கம் உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை, அன்வார்-ருக்கு முதன்மையான பிரச்சனையாக உள்ளது.

குறிப்பாக, புறநகர் பகுதிகளுக்கு கோலாலம்பூர் போன்ற நகர்புற பகுதிகளிலிருந்து பொருள்களைக் கொண்டு வர வேண்டியுள்ளதால், அதிக செலவாகின்றது. அங்கு வாழ்கின்ற மக்கள் வாழ்க்கை செலவின அதிகரிப்பை உணருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, சீர்த்திருத்த கொள்கைகள் குறித்து வாக்குறுதிகளை அளித்திருந்த அன்வார், அதனை தற்போது அமலாக்க செய்வதில் தோல்வி கண்டுள்ளதாகவே பார்க்கப்படுகின்றார்.

ஒருவேளை, சில சீர்த்திருத்தக் கொள்கைகள் முழுமையாக ஆராயப்பட வேண்டியிருக்கலாம். அது குறித்து அவர் மக்களிடம் பேச வேண்டும். அவர் கொண்டு வர விரும்பும் மாற்றங்கள், மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும்.

அன்வார்-ரால் மட்டுமே தனியொருவராக மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது. அவரது தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் அந்த கடப்பாடு உள்ளதாக, குவா முசாங் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தெங்கு ரசலெய்க் ஹம்சா வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS