கோலாலம்பூர், மே 31-
அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் மெய்க்காப்பாளர் ஒருவர் உடற்பேறு குறைந்த E-HAILING ஓட்டுநரை, முகத்தில் குத்தி, தாக்கிய விவகாரம் குறித்து போலீஸ் விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென பெரிக்காதான் நசியனால் கூட்டணியின் கொறடா தலைவர் டத்தோஸ்ரீ தகியுதீன் ஹாசன் வலியுறுத்தினார்.
தம்மை தாக்கியவருக்கு எதிராக வழங்கப்பட்ட புகாரை பாதிக்கபட்ட நபர் மீட்டுக்கொண்டாலும், விசாரணையைத் தொடரும் கடப்பாடு போலீசுக்கு உள்ளதாக கூறியுள்ள பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம்-மின் கூற்றுடன் தாங்கள் உடன்படுவதாகவும் அவர் கூறினார்.
சிவில் சட்டத்தின் கீழ் வேண்டுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் சமரசத்தின்படி, விசாரணையை நிறுத்தி, தீர்வைப் காணலாம்.
ஆனால், குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகின்ற குற்றச்செயல்கள் குறித்து புகார் அளிக்கப்படும்பட்சத்தில் அமலாக்க தரப்பு உரிய விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
எந்தவொரு சூழ்நிலையிலும், நிலை, செல்வாக்கு அல்லது அந்தஸ்து பார்க்காமல், அமலாக்க தரப்பு பொது அமைதிக்கு அரணாக இருக்கும் கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.
அதைவிடுத்து, நடவடிக்கையை எடுப்பதில் பாரபட்சம் காட்டினால், அது நிலைமையை மோசமாக்குவதுடன் உலகளவில் நாட்டின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திவிடும்.
அது தவிர, மக்களை தற்காப்பதோடு, அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்துவதில், நடப்பு அரசாங்கத்தின் ஆற்றல் மீது அதிருப்திகளையும் நம்பிக்கையில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும் என தகியுதீன் ஹாசன் எச்சரிக்கை விடுத்தார்.