கருத்துரைக்க மறுத்து விட்டார் ஹன்னா இயோ

சிலாங்கூர், மே 31-

சிலாங்கூர் மாநிலத்தில் பொது போக்குவரத்து சேவையை நடத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தனது கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான சர்ச்சை குறித்து இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ கருத்துரைக்க மறுத்து விட்டார்.

ஹன்னா இயோ-வின் கணவர் இராமச்சந்திரன் முனியாண்டி தலைமையேற்றுள்ள ஆசியா மொபிலிட்டி டெக்னாலஜிஸ் Sdn. Bhd. நிறுவனத்தை சிலாங்கூர் மாநிலத்தின் DRT பிரதான போக்குவரத்து திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட விவகாரம் தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் மேலோங்கியிருப்பதாக பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

சிலாங்கூர் மாநில அரசின் போக்குவரத்து சேவைக்கான DRT பரீச்சார்த்த திட்டத்திற்கு தனது கணவர் இராமச்சந்திரன் முனியாண்டியின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதில் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவிற்கு சம்பந்தமில்லை என்ற போதிலும் ஹன்னா இயோ, கடந்த 2013 ஆம் ஆண்டு மு தல் 2018 ஆம் ஆண்டு வரையில் DAP- சார்பில் சிலாங்கூர் மாநில அரசின் ஓர் அங்கமாக இருந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஹன்னா இயோ சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபா நாயகராக பொறுப்பேற்றுள்ளார்.

ஹன்னா இயோ கணவர் இராமச்சந்திரன் முனியாண்டி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு அதற்கான அதிகாரத்தை கொண்டுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளவர் ங் ஸ்செ ஹான் என்பவர் ஆவார். இவர் சிலாங்கூர் மாநில DAP செயலாளர் ஆவார்.

ஹன்னா இயோவின் கணவருக்கு குத்தகை வழங்கப்படவில்லை. மாறாக, போக்குவரத்து திட்டத்திற்கான லைசென்ஸ் உரிமம் மட்டுமே APAD ( அபாட் ) வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த புதன் கிழமை அமைச்சரவையில் விளக்கம் அளித்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் பாஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.

APAD ( அபாட் ) என்பது தரை பொது போக்குவரத்து கண்காணிப்பு ஏஜென்சியாகும். இது போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ளது. போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஆகும்.

இந்நிலையில் தனது கணவர் இராமச்சந்திரன் முனியாண்டியின் ஆசியா மொபிலிட்டி டெக்னாலஜிஸ் Sdn. Bhd. நிறுவனத்தை / சிலாங்கூர் மாநில போக்குவரத்து சேவைக்கான பரீட்சார்த்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டதில் அமைச்சர் ஹன்னா இயோ அல்லது அரசு பொறுப்பில் உள்ள அவர் சார்ந்த DAP- தலைவர்களின் நலன் சார்ந்த அம்சம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து ஹன்னா இயோவை நோக்கி பல்வேறு தரப்பினர் கேள்வி கணைகளால் துளைத்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS