முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் மோசடி சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? விசாரணை செய்யக்கோரி, SPRM- மிடம் மகஜர்

புத்ராஜெயா, மே 31-

இந்தியர்களை இலக்காக கொண்டு, ராசிப்பலன்கள் பெயர்கள் உட்பட மூன்று பிரதான முதலீட்டுத் திட்டங்களில் 85 லட்சம் வெள்ளிக்கு முதலீடு செய்யப்பட்டு, மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசில் பல புகார்கள் செய்யப்பட்டும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வியுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களின் வாழ்நாள் சேமிப்புப் பணத்தை பயன்படுத்தி இந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, மோசம் போன பத்து பேர்கள் சார்பில் மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் ஸ்ரீ ரமேஷ் / ஈஸ்வரி நேற்று புத்ராஜெயா, SPRM தலைமையகத்தில் அதன் முதிர்நிலை அதிகாரி சுல்ஹைரி ஜைனல் ஆபிதீன்-யிடம் இந்த மகஜரை சமர்ப்பித்துள்ளனர்.

SPRM ஆணையர், டான் ஸ்ரீ அசாம் பாக்கி- யின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த மகஜர் ஒப்படைக்கப்பட்டது.

பத்துகேவ்ஸ் வட்டாரத்தை தளமாக கொண்டு கொண்டு, முருகன் சுப்பிரமணியம் என்பவரால் தொடங்கப்பட்ட ராசி பலன்கள் பெயர்களை அடிப்படையாக கொண்ட முதலீட்டுத் திட்டம், Koperasi Mega Maju Selangor Berhad மற்றும் Personal Banc ( பான்க் ) Berhad ஆகிய மூன்று பிரதான முதலீட்டுத் திட்டங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் குறைந்த பட்சம் தலா 50 ஆயிரம் வெள்ளி முதல் 32 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி முதலீடு செய்துள்ளனர்.

தாங்கள் முதலீடாக செலுத்தியப் பணத்திற்கு எதுவும் திருப்பித்தரப்படாமல், அது கூட்டுப்பணம் என்று கூறி, சம்பந்தப்பட்ட கும்பல் தங்களை மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு முற்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் புகார் செய்துள்ளனர்.

Personal Banc ( பான்க் ) Berhad உட்பட மேலும் சில முதலீட்டுத் திட்டங்களில் 20 முதல் 30 விழுக்காடு வரையில் லாபம் கிடைக்கும் என்று நம்பி, லட்சக்கணக்கான வெள்ளியை தாங்கள் முதலீடு செய்ததாக 13 பேர், போலீஸ் புகார் செய்து இருப்பதாக இன்றைய புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், அன்று கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்த போது அறிவித்து இருந்தார்.

இந்த மோசடி திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் முருகன் சுப்ரமணியம், ரேவதி பொன்னுசனி, ஷாலினி, கிறிஸ்டின் மற்றும் முஹம்மது நாம் அஃபிஃப் ஆகியோருக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும், சம்பந்தப்பட்ட மோசடிப் பேர்வழிகளுக்கு எதிராக போலீஸ் துறை இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீ ரமேசும், ஈஸ்வரியும், பாதிக்கப்பட்டவர்களின் ஒருவரான டத்தோ இரா. செல்வமணியும் தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர்கள், இன்னமும் சுதந்திரமாக சுற்றித் திரிவது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதால், இதில் உண்மையிலே என்ன நடந்தது என்பதை SPRM ஆராய்வதுடன் இதன் மீதான விசாரணை முடியும் வரையில் சம்பந்தப்பட்டர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் உடனடியாக முடக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தங்கள் மகஜரில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களுடன், வழக்கறிஞர் மு. டினேஸ் மற்றும் பாதிக்கப்பட்டவர்களான ரவிசங்கர், பிரான்சிஸ், டத்தோ இரா. செல்வமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS