பெரிக்காத்தான் நேஷனலின் ஒளியலை, ஒரு போதும் மங்காது. மாறாக, ஒவ்வொரு இடைத் தேர்தலும் மிளிரும், மிளிரூட்டப்படும் என்று அந்த கூட்டணியின் தேர்தல் இயக்குநரும், கெடா மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ முஹம்மஸ் சானுசு முகமது நோர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள பெரிக்காத்தான் நேஷனலின் ஒளி வேகம், வரும் சுங்கை பகாப் இடைத்தேர்தலிலும் சுடர்விடும் என்று சனூசி குறிப்பிட்டார்.
கடந்த மூன்று தவணைக் காலம் பி.கே.ஆர் வசம் இருந்த சுங்கை பகாப் சட்டமன்றத் தொகுதி, கடந்த மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சியின் வசமானது. அந்த வெற்றியை பெரிக்காத்தான் நேஷனல் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று சனூசி நம்பிக்கைத் தெரிவித்தார்.