சிலாங்கூர், கிள்ளான், தாவரவியல் நகரம்-க்கிலுள்ள ஒரு வீட்டில் மனைவியைத் துடிதுடிக்க கொன்ற கணவரை போலீஸ் கைது செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து காலை மணி 7 அளவில், உயிரிழந்த பெண்ணின் அண்ணனிடமிருந்து தகவல் பெற்றதை அடுத்து, தனது தரப்பு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக,தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.
அங்கு,, 28 வயதுடைய அப்பெண், கழுத்து மற்றும் வலது கையில் வெட்டுக்காயங்களுடன் சுயநினைவின்றி படுத்திருந்தவாறு மீட்கப்பட்டார்.
உடற்கூறு ஆய்வில், அப்பெண்ணின் இடது காது, இடது கன்னம், தாடை, வலது தோள்பட்டை முதலான 12 பகுதிகளில் காயங்கள் உள்ளது கண்டறியப்பட்டது. 31 வயதுடைய அப்பெண்ணின் கணவரை போலீஸ் அதே நாளில் கைது செய்ததாக, சா ஹூங் ஃபாங் கூறினார்.
தொடக்கக்கட்ட விசாரணையில், ஈராண்டுகளுக்கு முன்பு, திருமணம் புரிந்ததுலிருந்து அவ்விருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது தெரிய வந்துள்ளது. அவ்விருவருக்கு 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள லோரி ஓட்டுநரான அவ்வாடவர் வரும் ஜூன் 14ஆம் தேதி வரையில் 7 நாள்களுக்கு தடுப்புக்காவலிடப்பட்டுள்ள வேளை, குடும்ப உறுப்பினர்கள் உள்பட பல்வேறு சாட்சிகளிடம் விளக்கம் பெறப்படும்.
விசாரணை நிறைவுற்றதும் அதன் அறிக்கை, கூடிய விரைவில் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அனுப்பிவைக்கப்படும் என சா ஹூங் ஃபாங் கூறினார்.
முன்னதாக, உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீஸ், அதனை வாகனத்தினுள் ஏற்றும் போது எடுக்கப்பட்டிருந்த 33 விநாடிகள் கொண்ட காணொலி X சமூக ஊடகத்தில் பரவலானது.