ரொம்பின், ஜூன் 10-
ரொம்பின், ஜாலான் குவாந்தன் – செகாமாட் சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் மலாக்கா, மஸ்ஜித் தானா, ஜெராம், தேசிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றாலும் அந்தப் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்று கல்வி துணை அமைச்சர் வாங் கா வாங் தெரிவித்தார்.
இந்த விபத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிய போதிலும் மாணர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மலாக்கா, அலோர் காஜா மாவட்ட கல்வி இலாகா உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அட்டவணைக்கு ஏற்ப பாடங்கள் நடைபெற்று வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கல்வி இலாகா செய்து வருவதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமுற்று, குவந்தான், தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற ஆசிரியர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் வாங் கா வாங் இதனை குறிப்பிட்டார்.