கோலாலம்பூர், ஜூன் 10-
நாட்டின் முக்கிய சுற்றுலா வாசஸ் தலங்களில் ஒன்றான கேமரன்மலையில் நிலவி வரும் வாகனப் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
ஆண்டு தோறும் ஆயிரகணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் குவியும் கேமரன்மலை, தனித்துவம் வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். இப்பகுதியில் கடுமையாகி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்று பகாங் சுல்தான் வலியுறுத்தினார்.
கேமரன்மலையின் சூழலை பார்வையிடுவதற்காக அந்த சுற்றுலா வாசஸ் தலத்திற்கு வருகை புரிந்து நிலைமை நேரில் பார்த்த போது போக்குவரத்து நெரிசல், ஒரு கடும் பிரச்னையாக தலைத்தூக்கி இருப்பதை நேரில் காண முடிந்ததாக சுல்தான் தெரிவித்தார்.