கோலாலம்பூர், ஜூன் 10-
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, நான்காவது மைல், பத்து கெண்டோமென், இராணுவ முகாமில் பாரந்தூக்கி இயந்திரமான கிரேன் குடை சாய்ந்த சம்பவத்தில் டிரெய்லர் லாரி ஓட்டுநர் 27 வயது அர்வின்ஸ் ராஜு உயிரிழந்த கோரச் சம்பவம் தொடர்பில் நீதி விசாரணை கோரி, அவரின் பெற்றோரும்,உடன் பிறப்புகளும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின்- னிடம் மகஜர் ஒன்றை இன்று வழங்கினர்.
மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன், அதன் செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் முன்னெடுத்துள்ள இவ்விவகாரம் தொடர்பில், இந்த சம்பவத்திற்கு மலேசிய தற்காப்பு அமைச்சு, தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று உயிரிழந்த அர்வின்ஸ் ராஜு-வின் தந்தை ராஜு ராமசாமி, தாயார் ஜெயந்தி ஜெயசந்திரன், சகோதர்கள் தனேஷ் ராஜு, அருனிஸ் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜுலை 20 ஆம் தேதி பத்து கெண்டோமென், இராணுவ முகாமில் 30 டன் எடைகொண்ட இராணுவ மண்வாரி இயந்திரத்தை கிரேன் மூலம் டிரெய்லர் லோரியில் தூக்கி வைக்கும் நடவடிக்கையில் ஒயர் விலகி, கிரேன் குடை சாய்ந்ததில் ஜோகூர், குளுவாங், தாமான் முர்னி-யைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான அர்வின்ஸ் – இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.
சம்பந்தப்பட்ட இராணுவ முகாமிலிருந்து அந்த கனரக ராணுவ தளவாடத்தை தூக்கி வைக்கும் போது, பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்ததற்கு பல்வேறு தரப்பினரின் கவனக்குறைவு இருந்துள்ளது என்றாலும், இராணுவப்படை SOP நடைமுறையை பின்பற்றியிருக்குமானால் இந்த உயிர் பலி சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று அர்வின்ஸ் – சகோதரர் தனேஷ் கூறுகிறார்.
இராணுவ முகாமிற்குள் நடந்த இச்சம்பவத்திற்கு தற்காப்பு அமைச்சே தார்மீக பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக முழு விசாணை நடத்தப்பட வேண்டும். தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தனேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன், அதன் செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் ஏற்பாட்டில் / அர்வின்ஸ் – குடும்ப உறுப்பினர்கள் கோலாலம்பூர், ஜாலான் பாடாங் தெம்பாக்- கில் உள்ள தற்காப்பு அமைச்சில் அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின்- னிடம் சார்வு செய்துள்ள மகஜரை தற்காப்பு அமைச்சின் நிர்வாக உதவியாளர் முஹம்மது லுக்மான் அல் ஹக்கிம் மஹத்- டிடம் பெற்றுக் கொண்டார்.