கோலாலம்பூர், ஜூன் 10-
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிப்பதற்கு விரிவான நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுககு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பெரிதக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வின் மூலம் போக்குவரத்து செலவினத்தை காரணம் காட்டி, பொருட்களின் விலை உயர்த்தப்படுவதற்கு வழிவகுக்கும். இது நடப்பு அரசாங்கத்தின் மோசமான முடிவை காட்டுகிறது என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், மக்களின் குறைகூறல்களையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் செவிசாய்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று முகைதீன் யாசின் தெரிவித்தார்.
லிட்டருக்கு 2 வெள்ளி 15 க்கு விற்கப்பட்ட டீசல், ஒரு வெள்ளி 20 காசு அதிகரிக்கப்பட்டு 3 வெள்ளி 35 காசுக்கு விலை உயர்த்தப்பட்டு இருப்பதானது, இந்த விலை உயர்வு, நடப்பு விலையில் 56 விழுக்காடு கூடுதலாகும்.
ஏற்கனவே பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, பொருட்களின் விலையை உயர்த்தப்படும் போது, இதனை மக்கள் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள்? மக்களின் அவதியை அரசாங்கம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று முகைதீன் கேள்வி எழுப்பினார்.
இந்த திடீர் உயர்வு பொருளாதார அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதுடன் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வுக்கு வழிவகுக்கும். டீசலுக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை அகற்றப்பட்டு இருப்பது மூலம் அரசாங்கம் 400 கோடி வெள்ளியை சேமிக்க முடியும் என்பதுடன் இது இலக்கிடப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் 200 வெள்ளி உதவித் தொகை வழங்குவதற்கு வகை செய்யும் என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், அரசாங்கம் சேமிக்கக்ககூடிய இந்த 400 கோடி வெள்ளி கையிருப்புடன் ஒப்பிடுகையில் மக்களுக்கு ஏற்படக்கூடிய செலவினம் இதை விட பன்மடங்கு அதிகமாகும். இதனை ஏன் கருத்தில் கொள்ளவில்லை, மதிப்பீடு செய்யவில்லை என்று முகைதீன் கேள்வி எழுப்பினார்.
டீசல் விலை நேற்று பின்னிரவுக்கு பிறகு லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசாக உயர்த்தப்பட்டு இருப்பது ஒரு தொடக்கம்தான். இன்னும் பெட்ரோல் விலையும் உயரக்கூடிய சாத்தியம் இருப்பதாக முகைதீன் கோடி காட்டினார்.